இந்துக்கள் மனதை புண்படும்படி பேசிய திருமாவளவன் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வோம்

இந்துக்கள் மனதை புண்படுத்தும்படி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வோம்.

Update: 2017-12-08 20:45 GMT

நெல்லை,

இந்துக்கள் மனதை புண்படுத்தும்படி பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பழனிவேல் சாமி கூறினார்.

இது குறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

திருமாவளவன் பேச்சுக்கு கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெரம்பூரில் நடந்த தலித் இஸ்லாமிய மாநாட்டில் பேசும்போது, இந்துக்கள் புனிதமாக வழிபடும் பெருமாள், சிவன் கோவில்களை உடைத்து விட்டு புத்த விஹார்களை கட்ட வேண்டும் என பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளது.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஏராளமானோர் பெருமாளை வழிபட்டு வருகிறார்கள். அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அய்யப்பனையும் வழிபடுகிறார்கள். திருமாவளவன் பேசிய பேச்சை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சிவன் கோவிலை உடைப்பேன் என்று கூறிய திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கோர்ட்டில் வழக்கு தொடர்வோம்

திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்படும். நெல்லை டவுன் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளோம். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கோர்ட்டில் வழக்கு தொடர்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது. இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், செயற்குழு உறுப்பினர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்