தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரம் 14,500 எக்டேரில் நெல் சாகுபடிக்கு வாய்ப்பு

பருவமழை மூலம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கிடைத்து வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2017-12-08 21:00 GMT
தூத்துக்குடி,

பருவமழை மூலம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கிடைத்து வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் 14,500 எக்டேரில் நெல் சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது.

விவசாயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. இங்கு முன் குறுவை, குறுவை, பிசானம் ஆகிய முப்போகம் விளைந்தது. தண்ணீர் பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக, இந்த சாகுபடி மெல்ல, மெல்ல குறைந்து குறுவை மற்றும் பிசான சாகுபடி மட்டுமே நடந்து வந்தது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாமல் பொய்த்ததால், விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு விவசாயம் செழிக்குமா, தண்ணீர் கிடைக்குமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். தற்போது வடகிழக்கு பருவமழையால் நெல்லை மாவட்டத்திலுள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் நேரடி பாசனத்தில் உள்ள பல குளங்கள் நிரம்பி உள்ளன. கடைமடை குளங்களும் நிரம்பும் நிலையில் உள்ளன. அதேசமயம், முந்தைய ஆண்டுகளை விட பாசனத்துக்கு தாமதமாக தண்ணீர் கிடைத்து வருகிறது.

‘நவரை பருவ’ சாகுபடி

இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் நெல் சாகுபடியை தொடங்கி உள்ளனர். வழக்கமாக பிசான பருவ சாகுபடியில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதத்துக்குள் நடவு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும். இந்த ஆண்டு தண்ணீர் கிடைக்க தாமதமானதால், விவசாயிகள் தற்போதுதான் நாற்று நடும் பணிகளை தொடங்கி உள்ளனர். இது ‘நவரை பருவம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பருவத்தில் டிசம்பர், ஜனவரியில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். வடமாவட்டங்களில் மட்டுமே இந்த நவரை பருவ சாகுபடி நடந்து வந்தது. தற்போது ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களால் தூத்துக்குடி மாவட்டமும் நவரை பருவ சாகுபடிக்கு முதல்முறையாக மாறி இருக்கிறது.

14,500 எக்டேர் நெல் சாகுபடி

மாவட்டத்தில் 14 ஆயிரத்து 500 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 2 ஆயிரத்து 500 எக்டேர் பரப்பில் நடவு பணிகள் முடிந்து உள்ளது. மற்ற இடங்களிலும் விரைவில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் இந்த பருவத்துக்கு ஏற்ற குறைந்த காலத்தில், அதிக மகசூல் தரக்கூடிய அம்பை-16, கர்நாடக பொன்னி ஆகிய நெல் விதைகளை வாங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.

மானாவாரி பயிர்கள்

இதே போன்று மானாவாரி பயிர்களும் போதிய மழை கிடைத்து இருப்பதால், நன்றாக வளர்ந்து வருகின்றன. உளுந்து, பாசி உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் 75 ஆயிரம் எக்டேர் பரப்பிலும், சோளம், மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் 50 ஆயிரம் எக்டேர் பரப்பிலும், பருத்தி 6 ஆயிரம் எக்டேரிலும் பயிரிடப்பட்டு உள்ளதாக, வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்