கழுகுமலை குமாரபுரத்தில் ஓடையில் இறங்கி தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

கழுகுமலை குமாரபுரத்தில், புதிய பாலம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தே.மு.தி.க.வினர் ஓடையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-08 21:00 GMT

கழுகுமலை,

கழுகுமலை குமாரபுரத்தில், புதிய பாலம் அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, தே.மு.தி.க.வினர் ஓடையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்

கழுகுமலை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலை பெய்த பலத்த மழையில், உப்போடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கழுகுமலையை அடுத்த குமாரபுரத்தில் உப்போடையின் குறுக்காக புதிய பாலம் அமைப்பதற்காக, தற்காலிக தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. காட்டாற்று வெள்ளத்தில் இந்த பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது.

லாரி சிக்கியது

அப்போது அந்த வழியாக வந்த லாரி தரைமட்ட பாலத்துக்கும், சாலைக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கியவாறு நின்றது. லாரி டிரைவர் தண்ணீரில் குதித்து உயிர் தப்பினார். இதனால் கழுகுமலை– கோவில்பட்டி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் நடுவப்பட்டி, இளையரசனேந்தல் வழியாகவும், செட்டிகுறிச்சி, வானரமுட்டி வழியாகவும் சுற்றி சென்றன. பின்னர் பாலத்தில் சிக்கிய லாரியை கிரேன் மூலம் மீட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

தொடர்ந்து நேற்று காலையில், சேதம் அடைந்த தரைமட்ட பாலத்தின் இருபுறமும் மணல் மூடைகளை நிரப்பி, ராட்சத குழாய்களை மீண்டும் பதித்து சீரமைக்கும் பணி நடந்தது. இதனால் 2–வது நாளாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் இந்த பாலத்தை அபாயகரமாக கடந்து சென்றனர்.

தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே குமாரபுரம் உப்போடையின் குறுக்காக புதிய பாலம் கட்டும் பணி கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மெதுவாக நடைபெற்று வருகிறது. எனவே, அங்கு புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அங்கு, கடந்த 3 மாதங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைமட்ட பாலம் 2 முறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. எனவே, தற்காலிக பாலத்தை தரமாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தே.மு.தி.க.வினர் நேற்று காலையில் அங்குள்ள உப்போடையில் தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சீனிராஜ், சாமி சுரேஷ், அவை தலைவர் முருகேச பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, பெருமாள்சாமி, நகர செயலாளர் வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்