ஊழலை ஒழிக்க ஒரு நாள் போதுமா?
நமது நாட்டை மட்டுமல்ல, உலகையே இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கிற கொடிய நோய் எது?

எய்ட்ஸ்... புற்றுநோய்... மாரடைப்பு... இதய செயலிழப்பு அல்லது பயங்கரவாதம் என உங்களிடம் இருந்து பலவிதமான பதில் வரலாம்.
ஆனால் இவை எதுவும் இல்லை.
ஊழல்தான் உலகின் கொடிய நோயாக இன்று உருவெடுத்து, ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
அடிமட்டம் முதல் மேல்மட்டம் வரை ஊழல் வியாபித்து பரவாத இடமும் இல்லை; துறையும் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் உலகமெங்கும் லஞ்சமாக தரப்படுகிற தொகை, 1 டிரில்லியன் அமெரிக்க டாலர். அதாவது ரூ.65 லட்சம் கோடி.
ஊழல் செய்து கொள்ளையடிக்கப்படுகிற பணம் எவ்வளவு தெரியுமா? 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 கோடியே 69 லட்சம் கோடி).
இப்படி ஊழலில் போகிற பணம், உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 5 சதவீதம் என்பது அதிரவைப்பதாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் வளர்ச்சிப்பணிகளுக்கு செலவு செய்கிற தொகையை விட இது 10 மடங்கு அதிகம். இந்தப் புள்ளி விவரங்கள் யு.என்.டி.பி. என்று அழைக்கப்படுகிற ஐ.நா. வளர்ச்சித்திட்ட புள்ளி விவரங்கள்.
ஊழலுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி எந்த நாட்டிடமும், எந்த பிராந்தியத்திடமும், எந்த இனத்திடமும் இல்லை என்பதற்கு இந்த புள்ளி விவரங்கள்தான் மகத்தான ஆதாரம்.
அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ந் தேதியன்று சர்வதேச ஊழல் தடுப்பு தினமாக கடைப்பிடிக்க ஐ.நா. சபை பிரகடனம் செய்துள்ளது.
ஊழலை ஒழிப்பதற்கு, ஊழலை தடுப்பதற்கு, ஊழல் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்படுத்துவதற்கு இந்த ஒரு நாள் போதுமா என்றால் போதாது. ஒவ்வொரு நாளும் ஊழல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடித்தாக வேண்டிய அளவுக்கு ஊழல், விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
ஆசிய நாடுகளில் ஊழல் பற்றி சர்வே எடுத்து, அதன் முடிவுகள் ஒரு பட்டியலாக சமீபத்தில் வெளியானது. அந்த ஊழல் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் நமது நாடுதான் இருக்கிறது.
இந்த சர்வேயில், “அரசு அலுவலகங்களில் லஞ்சம் தருகிறோம், அரசு அமைப்புகளில் லஞ்சம் தருகிறோம், லஞ்சம் தந்தால் வேலை நடக்கிறது” என்று 54 சதவீத இந்தியர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இரண்டில் ஒருவர் லஞ்சம் தந்துதான் காரியம் சாதிக்கிறார்கள்.
இந்தியாவில் லஞ்சம் எதில் எல்லாம் அதிகமாக தலைவிரித்தாடுகிறது தெரியுமா?
* நிலம், சொத்து விவகாரங்களில் 38 சதவீதம்.
* சட்டத்தை அமலாக்கும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் 62 சதவீதம் பேர் லஞ்சம் வாங்குகின்றனர். இதில் போலீஸ் துறைக்குத்தான் முக்கிய பங்கு. ஒரு ஆண்டில் சராசரியாக பாஸ்போர்ட் சரிபார்ப்பு வகையில் மட்டும் 30 சதவீத லஞ்சம் போகிறதாம். இதற்காக ரூ.500 முதல் ரூ.2,500 வரை லஞ்சம் பெறப்படுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. போக்குவரத்து விதிகள் மீறலுக்கு 25 சதவீதம் லஞ்சம் போகிறதாம்.
* லாரி ஓட்டுகிறவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தருகிற லஞ்சம் ரூ.222 கோடி என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு சொல்கிறது.
* ஓட்டுனர் உரிமம் வாங்குவதில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஓட்டிக்காட்டும் சோதனையில் ஈடுபடாதவர்கள் 60 சதவீதம் பேரும், ஓட்டுனர் உரிம சோதனையில் தோல்வி அடைகிறவர்களில் 54 சதவீதம் பேரும் லஞ்சம் கொடுத்து ஓட்டுனர் உரிமம் பெறுகின்றனர்.
இப்படி ஊழல் செய்து ஓட்டுனர் உரிமங்களை பெற்று அவர்கள் வாகனங்களை ஓட்டுகிறபோது விபத்துகளும், அதனால் ஏற்படுகிற மரணங்களும், உடலுறுப்பு இழப்புகளும் தவிர்க்க முடியாதவையாக ஆகிவிடுகின்றன.
* சின்னச்சின்ன ஊழல் என்று சொல்லப்படுகிற வகையில், கல்வி, சுகாதாரம் போன்ற 11 அடிப்படை சேவை பிரிவுகளில் ஆண்டுக்கு போகிற லஞ்சம் ரூ.31 ஆயிரத்து 972 கோடியே 50 லட்சம்.
* இந்தியாவில் ஏழைகளுக்கு சென்றடைய வேண்டிய உணவு தானியங்கள், உரியவர்களில் 40 சதவீதம் பேருக்குத்தான் போய்ச் சேருகிறது. இதுபோன்று நலத்திட்ட உதவிகளும், ஊழலால், மோசமான நிர்வாகத்தால் உரியவர்களை சென்றடைவதில்லை.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான், ஊழல் என்பது இன்றைய வாழ்வின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது என்று மக்களும் சொல்கிற நிலை உருவாகிவிட்டது.
வெளிநாடுகளில் சட்ட விரோதமாக ஒரு காரியத்தை செய்து கொள்வதற்குத்தான் லஞ்சம் கொடுக்கிறார்கள். ஆனால் நமது நாட்டிலோ ஒரு காரியத்தை சட்டப்பூர்வமாக செய்து கொள்வதற்கே லஞ்சம் கொடுத்தாக வேண்டிய நெருக்கடி உள்ளது.
ஊழலை ஒழிப்பதற்கான மந்திரக்கோல் எந்த அரசாங்கத்திடமும் இல்லை. ஊழலுக்கு எதிராக அத்தனைபேரும் நீண்டதொரு யுத்தம் நடத்தித்தான் ஆக வேண்டும்.
அந்த யுத்தத்தில் நாட்டு மக்கள் அத்தனைபேரும் தோளோடு தோள் நின்று, கரம் கோர்க்க வேண்டும்!
- இலஞ்சியன்.