சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும்

ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில் சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய மருத்துவ கழகத்துக்கு புதுவை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2017-12-07 23:51 GMT

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்திய மருத்துவ கழகமானது புதுச்சேரியில் உள்ள 3 சுயநிதி மருத்துவ கல்லூரிகளான ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கழகம் (பிம்ஸ்) ஆகியவற்றில் பட்ட மருத்துவ கல்வி சட்டம் 1997–க்கு புறம்பாக 2017–18 ஆம் கல்வியாண்டில் மருத்துவ படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேர்க்கப்பட்ட 105 மாணவர்களை வெளியேற்ற கூறியுள்ளது.

இந்திய மருத்துவ கழகம் தெரிவித்ததற்கிணங்க புதுச்சேரி அரசு இந்த 3 கல்லூரிகளிலும் சேர்க்கப்பட்ட மாணவர்கள் முறையே 41, 38, 26 பேரை உடனடியாக வெளியேற்றிவிட்டு இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இந்த 3 சுயநிதி கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கழகத்தின் இந்த வெளியேற்ற நடவடிக்கை என்பது இந்த கல்லூரிகளால் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள இந்த மாணவர்களின் பெயர்கள், இந்திய மருத்துவ கழகத்துக்கு சென்டாக் வழங்கிய பட்டியலில் இல்லாததன் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

புதுச்சேரி அரசானது இந்திய மருத்துவ கழகத்தின் இந்த அறிவுறுத்தலை புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தமிழ்நாடு மாநில மருத்துவ கழகத்தின் கவனத்துக்கும் தேவையான நடவடிக்கைக்காகவும் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ கழகமானது புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திலிருந்து புதுச்சேரி சென்டாக் வழங்கிய 56 மாணவர்களை (55 அரசாங்க ஒதுக்கீடு மற்றும் ஒரு நிர்வாக ஒதுக்கீடு) வெளியேற்றுமாறு தவறுதலாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்டாக் வழங்கிய இந்த 56 மாணவர்கள் தொடர்பான நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய மருத்துவ கழகத்தை புதுச்சேரி அரசு அணுகியுள்ளது. மேலும் இந்திய மருத்துவ கழகத்திடமிருந்து அடுத்த ஆணை அல்லது கடிதம் வரும்வரை இந்த மாணவர்களை வெளியேற்றாமல் இருக்க அந்த கல்லூரிக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே இந்த 56 மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும், பாதுகாவலர்களும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், இதுதொடர்பாக ஏதேனும் வதந்திகள் பரப்பப்பட்டால் அதனை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு புதுவை நலவழித்துறை இயக்குனரை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்