கொடிநாளுக்கு தாராளமாக நிதி அளியுங்கள் நாராயணசாமி வேண்டுகோள்

கொடிநாளுக்கு தாராளமாக நிதி அளியுங்கள் என்று பொதுமக்களுக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2017-12-07 23:33 GMT

புதுச்சேரி,

கொடிநாளையொட்டி புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கொடிநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இரவு பகல் பார்க்காமல் காலநிலை கருதாது நம்மையும் நம் எல்லைகளையும் காக்கும் ராணுவத்தினரை நினைவுகூர்ந்து நன்றி கூறும் நாள் இந்தநாள். மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் என அனைவரும் இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவது பாராட்டுக்குரியது.

கடந்த 2011–ம் ஆண்டு முதல் யூனியன் பிரதேசங்களிலேயே அதிகபட்ச கொடிநாள் வசூல், அதிகபட்ச தனிநபர் கொடிநாள் வசூலுக்கான சுழற்கோப்பைகளை தொடர்ந்து புதுவை யூனியன் பிரதேசம் பெற்று வருகிறது. நம்முடைய மாநில மக்கள் படை வீரர்களின்பால் கொண்டுள்ள மரியாதையின் விளைவாகத்தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிகிறது.

நாம் இந்த கோப்பைகளை தொடர்ந்து பெற்றிடவேண்டும் என்பதே என் ஆவலாகும். புதுவை யூனியன் பிரதேசத்தில் போர்வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் கைம்பெண்களுக்கான வாழ்வாதார தொகை முறையே ரூ.6 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை காட்டிலும் அதிகமானதாகும்.

கடந்த ஆண்டு எனது அரசு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் நல்வாழ்விற்காக ரூ.85.74 லட்சம் செலவு செய்துள்ளது. தற்போது பணிபுரியும் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த கொடிநாளில் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பாதுகாப்பிற்கென தம் வாழ்நாளை அர்ப்பணித்த முப்படையினருக்கு நன்றி செலுத்தவும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பொதுமக்கள் கொடிநாளுக்கு தாராளமாக நிதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்