யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

ராஜபாளையம் அருகே குடிநீர் இணைப்புக்கு கட்டணம் செலுத்தியும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை பாதிக்கப்பட்ட கிராமமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2017-12-07 23:03 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தரநாச்சியார்புரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி மன்றம், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக தனிநபர் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக பஞ்சாயத்து சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.5 ஆயிரம் கட்டணம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கிராம பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் வான்மதி, பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அதிகாரியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அளந்தப்பன், கிராம செயலர் ஆகியோரிடமும் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் யூனியன் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கிராம மக்களை சமரசப்படுத்தினர். சிலர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் யூனியன் அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்