நெற்புகப்பட்டி பகுதியில் பயன்பாடின்றி காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டிகள்

கல்லல் அருகே நெற்புகப்பட்டி பகுதியில் தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்தும், மின் மோட்டார்கள் பழுதாகியும் காட்சிப்பொருளாக உள்ளன.

Update: 2017-12-07 22:54 GMT
கல்லல்,

கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்டது நெற்புகப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் நெற்புகப்பட்டி, கூமச்சிப்பட்டி, களத்துப்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தெருக்கள் வாரியாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக இந்த தொட்டிகளில் இருந்து தண்ணீர் பிடித்து வந்தனர்.

ஆனால் கடந்த ஓராண்டிற்கு மேலாக நெற்புகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள் சில பழுதடைந்தும், சிலவற்றில் மின் மோட்டார்கள் பழுது காரணமாகவும் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் 2 கி.மீ. தூரம் சென்று தண்ணீர் எடுத்துவரவேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக நெற்புகப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அந்த ஊரில் உள்ள 2 தண்ணீர் தொட்டிகள் 2 ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது. இதுபோக இந்த ஊரில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. எனவே நெற்புகப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெற்புகப்பட்டியை சேர்ந்த மக்கள் கூறும்போது, ஊராட்சியில் உள்ள பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்தும், மின் மோட்டார்கள் பழுதாகியும் உள்ளன. மேலும் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால், இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்லவே அச்சமடைகிறார்கள். இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஓராண்டாக இதே நிலைமை நீடிக்கிறது. ஊராட்சி மூலம் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானமும் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்