நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், இந்த பிரச்சினையை ஆண்டாண்டு காலமாக நீடிக்க விட மாட்டோம் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2017-12-07 22:08 GMT

 

மும்பை,

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், இந்த பிரச்சினையை ஆண்டாண்டு காலமாக நீடிக்க விட மாட்டோம் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நரேந்திர தபோல்கர் கொலை

புனேயை சேர்ந்த சமூக சேவகர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு 20–ந் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதேபோல், கோலாப்பூரை சேர்ந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே 2015–ம் ஆண்டு பிப்ரவரி 16–ந் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த இரண்டு வழக்குகளிலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதில், போலீசார் திணறி வருகிறார்கள்.

ஆகையால், ஐகோர்ட்டு கண்காணிப்பின்கீழ், விசாரணை நடைபெற கோரி, மும்பை ஐகோர்ட்டில் அவர்களது குடும்பத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி, பாரதி தாங்க்ரே ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

கற்றுக்கொள்ளவில்லை

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:–

நம் நாட்டின் விசாரணை முகமைகள் கடந்தகால பாராளுமன்ற தாக்குதல், பிரதமர் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை. நரேந்திர தபோல்கர் கொலை வழக்கிலும், பன்சாரே கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளிகள் இதுநாள் வரை கைது செய்யப்படவில்லை.

இந்த பிரச்சினை ஆண்டாண்டு காலமாக நீடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சி.பி.ஐ.யும், சி.ஐ.டி.யும் தங்களது உயர் அதிகாரிகளை ஈடுபடுத்தி, விசாரிப்பதற்கு இது தான் சரியான தருணம். மாநில உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., மற்றும் சி.பி.ஐ. இணை இயக்குனர். சி.ஐ.டி.க்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் கலந்துபேசி, இதன் மீது முடிவு எடுக்கட்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 21–ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பத்மாவதி படக்குழுவினருக்கு அச்சுறுத்தல் குறித்து நீதிபதிகள் வேதனை

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே வழக்கை விசாரித்த நீதிபதிகள், பத்மாவதி பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை தீபிகா படுகோனேக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை சுட்டிக்காட்டி, வேதனை தெரிவித்தனர். நீதிபதிகள் கூறியதாவது:–

இந்த நாட்டில், பொதுமக்கள் தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத சூழ்நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். எப்போது, ஒருவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த விரும்பினால், சிலரோ அல்லது ஒரு குழுவோ, அவரை பேச அனுமதிக்க மாட்டோம் என்று குறுக்கிடுகிறார்கள். இது நன்மை பயக்காது. வேறு எந்த நாட்டிலாவது கலைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதை பார்த்திருக்கிறீர்களா?.

ஏராளமானோரின் அயராத உழைப்பினால், தனிச்சிறப்புமிக்க படத்தை இயக்கிய ஒருவர், தொடர்ச்சியான மிரட்டல் காரணமாக, அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிப்பது வேதனை அளிக்கிறது. அந்த நடிகையை கொலை செய்பவருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று சிலர் அறிவிக்கிறார்கள். முதல்–மந்திரிகள் கூட அந்த படத்தை தங்கள் மாநிலங்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். செல்வ வளமிக்க நபர்களுக்கே இந்த கதி என்றால், ஏழைகளின் நிலைமை? மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமையும், நற்பெயரும் இதுபோன்ற பிரச்சினைகளால் எங்களை கவலையில் ஆழ்த்துகிறது. இதுபோன்ற சம்பவங்களால் நாடு மிகவும் கேவலமான வடிவத்தை தரிக்கிறது.

மராட்டியமும், கர்நாடகமும் சமூக சீர்திருத்தவாதிகளுக்கும், சிந்தனையாளர்களுக்கும் பெயர்போன மாநிலங்கள். ஆனால் அரசியல் ரீதியாக, இதுபோன்ற சம்பவங்களால் இந்த மாநிலங்கள் அசிங்கமான உருவம் எடுக்கின்றன.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்