விமான நிலையத்தில் ரூ.81 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் கேரளாவை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.81 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2017-12-07 22:05 GMT

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் ரூ.81 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வழியாக மும்பை விமான நிலையத்தில் சம்பவத்தன்று விமானம் ஒன்று வந்து இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, கோழிக்கோட்டில் இருந்து வந்த முகமது என்ற பயணி 8 தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அந்த தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.25 லட்சத்து 37 ஆயிரம் ஆகும். இதையடுத்து முகமது சகார் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

கைது

இதில், துபாயில் இருந்து அந்த தங்கக்கட்டிகளை கோழிக்கோடு வரை ஒருவர் கடத்தி வந்ததாகவும், அவர் தங்கக்கட்டிகளை விமான இருக்கையின் பின்பக்கத்தில் மறைத்து வைத்துவிட்டு கோழிக்கோட்டில் இறங்கி விட்டதாகவும், கோழிக்கோட்டில் இருந்து மும்பைக்கு அந்த தங்கக்கட்டிகளை தான் கடத்தி வந்ததாகவும் தெரிவித்தார். மும்பையில் யாரிடம் கொடுப்பதற்காக அந்த தங்கக்கட்டிகளை கொண்டு வந்தார் என்பதை கண்டறிய அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இன்னொரு சம்பவத்தில் சென்னையில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ரூ.56 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த முகமது ரபிக் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்