70 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு அரண்மனைக்கு ஆண் வாரிசு மைசூருவில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
70 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு அரண்மனைக்கு ஆண் வாரிசு கிடைத்துள்ளதால் மைசூருவில் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மைசூரு,
70 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு அரண்மனைக்கு ஆண் வாரிசு கிடைத்துள்ளதால் மைசூருவில் பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
திரிஷிகா குமாரிக்கு ஆண் குழந்தைமைசூரு அரண்மனை இளவரசராக இருப்பவர் யதுவீர். இவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் ராஜவம்சத்தை சேர்ந்த திரிஷிகா குமாரிக்கும் கடந்த 2016–ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திரிஷிகா குமாரி கர்ப்பமாக இருந்தார். சமீபத்தில் நடந்த தசரா விழாவில் இளவரசி திரிஷிகா குமாரி கர்ப்பிணியாக பங்கேற்றார். மைசூரு அரண்மனை வரலாற்றில் மைசூரு தசரா விழாவில் கர்ப்பிணியாக பங்கேற்ற 3–வது இளவரசி திரிஷிகா குமாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதைதொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 1–ந்தேதி மைசூரு அம்பா விலாஸ் மண்டபத்தில் திரிஷிகா குமாரிக்கு வளைகாப்பு வைபவம் நடந்தது. அதன்பின்னர் திரிஷிகா குமாரியும், யதுவீரும் பெங்களூருவில் உள்ள அரண்மனையில் தங்கியிருந்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் பெங்களூரு இந்திரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதாவது ஸ்ரீராம நட்சத்திரத்தில் திரிஷிகா குமாரிக்கு குழந்தை பிறந்துள்ளது.
சுகப்பிரசவம்சுகப்பிரசவத்தில் திரிஷிகா குமாரி குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷிகா குமாரியையும், குழந்தையையும் இளவரசர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளதால், அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். விஜயநகரத்தை ஆண்ட திருமலா ராஜாவிடம் இருந்து விஜயநகரை கைப்பற்றிய ராஜ உடையார், அவரது மனைவி அலமேலம்மாவை தனதாக்கிக் கொள்ள முயன்றார். இதனால் அலமேலம்மா காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அலமேலம்மா, மைசூரு மன்னர் குடும்பத்தினருக்கு குழந்தை பாக்கியம் இருக்கக் கூடாது என்பது உள்பட 3 சாபங்களை இட்டார்.
அதனால் இன்று வரை மைசூரு மன்னர் குடும்பத்தினருக்கு வாரிசு இல்லாமல் இருந்து வந்தது. அலமேலம்மா சாபத்தால் தான் மைசூரு மன்னருக்கு வாரிசு இல்லை என்றும் மக்கள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் தற்போது யதுவீர்–திரிஷிகா குமாரி தம்பதிக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளதால் அந்த சாபம் நீங்கியதாக மைசூரு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு மன்னருக்கு ஆண் வாரிசு பிறந்திருப்பதால் அந்த மகிழ்ச்சியை மைசூரு மாவட்ட மக்கள் ஒருவருக்கொருவர் நேற்று இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதாவது, யதுவீர்–திரிஷிகா குமாரி ஆகியோரின் உருவப்படம் அச்சிட்ட பாலித்தீன் பைகளில் சுமார் ஒரு கிலோ சர்க்கரை வழங்கினர். அதேப் போல் மைசூரு அரண்மனை நிர்வாகம் சார்பிலும் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் சர்க்கரை வழங்கி, மைசூரு அரண்மனைக்கு வாரிசு கிடைத்த மகிழ்ச்சி கொண்டாடப்பட்டது.
விரைவில் திரிஷிகா குமாரி, குழந்தையுடன் மைசூரு அரண்மனைக்கு அழைத்துவரப்படுவார் எனவும், அதன் பின்னர் நல்ல நாளில் குழந்தைக்கு பெயர் சூட்டு வைபவம் நடக்கும் என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரிஷிகா குமாரியின் குழந்தை புகைப்படம் வெளியானது
மைசூரு இளவரசர் யதுவீரின் மனைவி திரிஷிகா குமாரிக்கு நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தையின் புகைப்படம் நேற்று கன்னட செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதேப் போல் திரிஷிகா குமாரி தனது குழந்தையை கொஞ்சி மகிழும் புகைப்படம் வெளியானது