காட்டுமன்னார்கோவில் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல்

காட்டுமன்னார்கோவில் அருகே தடையின்றி குடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-07 22:15 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள எய்யலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்புளியம்பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுக் குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மின் மோட்டார் பழுதானதால் கடந்த சில நாட்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதனால் கடந்த 10 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதையடுத்து பழுதான மின் மோட்டாரை சரி செய்யக் கோரி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை அதே பகுதியில் உள்ள எய்யலூர் மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்காத கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து மின் மோட்டாரை சரிசெய்து தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்பு தான் சாலை மறியலை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் இதுபற்றி அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கும், விளை நிலங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது.

அதனால் தங்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை ஏற்ற கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்