ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதலை தடுக்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கீழ்வேளூரில் விவசாய தொழிலாளர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-07 22:45 GMT
கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆதிதிராவிட மக்களின் உரிமை தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பொறுப்பாளர்கள் முருகையன், பக்கிரிசாமி, சிவசாமி, வசந்தா ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நாகராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். வன் கொடுமை தடுப்பு சட்டத்தை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். வன்கொடுமை தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நிதி வழங்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க மாவட்ட அளவில் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியை 200 நாட்களாக உயர்த்தி ரூ.400 ஊதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியை நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். தமிழக அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த காசிநாதன், முருகானந்தம், மகாலிங்கம், குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்