கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறைவுபெறுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறைவுபெறுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2017-12-07 23:15 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது கோடநாடு அருகில் உள்ள ஈளாடா தடுப்பணை. பல ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகை குறைவாக இருந்த போது இந்த தடுப்பணையில் இருந்து கோத்தகிரி பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது போதுமானதாக இருந்தது. ஆனால் மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் தனியார் விடுதிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை காரணமாக ஈளாடா தடுப்பணையில் இருந்து வினியோகிக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக கோத்தகிரி பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்த காரணத்தால் ஈளாடா தடுப்பணை அடிக்கடி வறண்டது.

இதைத்தொடர்ந்து கோத்தகிரி பேரூராட்சி பொது நிதி ரூ.40 லட்சம் ஒதுக்கப் பட்டு அணை தூர்வாரும் பணி நடந்தது. ஆனால் அப்போது பெய்த மழை காரணமாக அந்த பணி பாதியில் தடைப்பட்டது. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈளாடா தடுப்பணை மீண்டும் வறண்ட போது மாவட்ட கலெக்டர் வறட்சி நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து ஈளாடா தடுப்பணை தூர்வாரப்பட்டு பக்கவாட்டு தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டன. இதனால் முன்பு இருந்ததை விட இரட்டிப்பு கொள்ளளவுடன் தண்ணீரை தேக்கி வைக்க தயார் செய்யப்பட்டது.

ஈளாடா தடுப்பணை அடிக்கடி வறண்டு போவதாலும், பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டி அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்க கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திட்டமிடப்பட்டது. இதற்காக 10 கோடியே 60 லட்சம் ரூபாய் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் பணிகள் ஒரு ஆண்டுக்குள் முடிக்கவும் முடிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டன.

மேலும் கோத்தகிரி பேரூராட்சி கடனாக ஒதுக்கப்பட்ட இந்த நிதியை பல தவணைகளாக திரும்ப கட்டி முடிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையையும் தமிழக அரசு மானியமாக வழங்குவதாக அறிவித்தார்.

தொடர்ந்து அளக்கரை பகுதியில் செல்லும் ஓடையை மறித்து தண்ணீரை சேகரிக்க பெரிய அளவிலான தரைமட்ட நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டதுடன், அங்கிருந்து ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் கோத்தகிரி சக்திமலை பகுதிக்கு தண்ணீரை கொண்டு வர குழாய்கள் பதிக்கப்பட்டு, 6 இடங்களில் நீர்தேக்கத் தொட்டிகளும், நீர் உந்து மோட்டார் அறைகளும் கட்டப்பட்டன.

அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் மணல் தட்டுபாடு காரணமாகவும், கோத்தகிரி சக்திமலை பகுதியில் இந்த திட்டத்துக்காக வருவாய் துறைக்கு சொந்தமான நிலத்தை குடிநீர் வடிகால் வாரியத்துக்கு முறையாக ஒப்படைக்காத காரணத்தாலும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் சக்திமலை பகுதியில் மெகா குடிநீர் சேகரிக்கும் தொட்டி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மோட்டார் அறை அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஒரு ஆண்டில் முடிக்கப்பட வேண்டிய பணிகள் 3 ஆண்டுகளாகியும் முடிக்கப்படாமல் அரசு பணம் விரயமாகும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அளக்கரை குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்ததுடன் துரிதமாக இப்பணிகளை முடிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த பணிகள் மீண்டும் தொடங்கின. சக்திமலை பகுதியில் பாதி கட்டிய நிலையில் இருந்த குடிநீர் தொட்டியின் பணிகள் முடிவடைந்து மூடப்பட்டு இரும்பு குழாய்கள் பொருத்தப்பட்டன. மேலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 70 அடி நீளமும், 20 அடி அகலமும், 10 அடி உயரமும் கொண்ட தொட்டி கட்ட இரும்பு கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் தரைத்தளம் அமைக்கும் பணி கடந்த மாதம் முடிவடைந்தது.

இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பக்கவாட்டு சுவர்கள் அமைக்கும் பணிகள் தடைபட்டது. இது மட்டுமின்றி இந்த பகுதியில் செங்குத்தான பகுதியை வெட்டி நிலத்தை சமன் செய்யும் போது ஏராளமான ராட்சத பாறைகள் மண்ணுக்குள் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் பணிகள் முடிவடைய கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

தற்போது பொக்லைன் எந்திரங்கள் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனினும் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முடிந்து எப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் எப்போது நிறைவுபெறும் என்பது கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்