பாலக்கோடு அருகே பஸ் மோதி பள்ளி மாணவன் சாவு

பாலக்கோடு அருகே பஸ் மோதிய விபத்தில் அரசுப்பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2017-12-07 22:45 GMT
பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அனுமந்தபுரம் ஊராட்சி முனியப்பன் கோவில் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரத்னா. இவர்களுக்கு நித்யா என்ற மகளும், ஜீவானந்த் என்ற மகனும் உள்ளனர். யஷ்வந்த்(வயது 6) என்ற மகனும் இருந்தான். இவன் அனுமந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நித்யா, ஜீவானந்த், யஷ்வந்த் ஆகியோர் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது முனியப்பன் கோவில் அருகே வந்தபோது பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக யஷ்வந்த் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட யஷ்வந்த் பலத்த காயம் அடைந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி பஸ் டிரைவரை தேடி வருகின்றனர். பஸ் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்