ஆந்திராவுக்கு கரும்பு ஏற்றிச்சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஆந்திராவுக்கு கரும்பு ஏற்றிச்சென்ற லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. அதேபோல் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திராவில் உள்ள பிச்சாட்டூர், நெல்வாய், புஜ்ஜிநாயுடுபாளையம், நாயுடுபேட்டை பகுதிகளில் தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. தமிழக அரசு கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,850 நிர்ணயித்து உள்ளது. ஆனால் ஆந்திராவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கி வருகிறது.
இதனால் விவசாயிகள் கரும்புகளை, ஆந்திராவில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு லாரிகளில் எடுத்துச்சென்று விற்று வருகின்றனர். மேலும், நலிந்த விவசாயிகளுக்கு ஆந்திரா சர்க்கரை ஆலைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று தருகின்றன. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால் உடனடியாக இழப்பீட்டு தொகையும் வழங்குகின்றனர்.
தடுத்து நிறுத்தினர்
இந்நிலையில் ஊத்துக்கோட்டையை சேர்ந்த விவசாயிகள் பழனி, ஸ்ரீராமாபுரம் கிராமத்தை சேர்ந்த ரங்கப்பநாயுடு ஆகியோர் கரும்புகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஆந்திராவுக்கு புறப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வேளாண்துறை உதவி இயக்குனர் ராமு உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று ஊத்துக்கோட்டை நகர எல்லையில் கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தினர்.
இந்த தகவல் கிடைத்ததும் திருவாலங்காடு சர்க்கரை ஆலையில் 2013-ம் வருடம் முதல் 2017 வரை கரும்பு விற்று பணம் பெறாத விவசாயிகள் அங்கு திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் சம்மதம்
இதையடுத்து, ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். லாரிகளை விடுவிக்க தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள தொகையை விரைவில் பெற்று தருவதாக தாசில்தார் உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகையிட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.