நசரத்பேட்டையில் சரக்கு ஆட்டோவில் வைத்து இருந்த ரூ.1.80 லட்சம் திருட்டு

நசரத்பேட்டையில் சரக்கு ஆட்டோவில் வைத்து இருந்த ரூ.1.80 லட்சத்தை திருடிச்சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2017-12-07 23:15 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 40). மாடுகள் வளர்ப்பவர்களிடம் மொத்தமாக பாலை வாங்கி விற்பனை செய்துவருகிறார். துரைராஜ் பாலை மொத்தமாக வாங்கியவர்களிடம் பணம் கொடுப்பதற்காக நேற்று மாலை பூந்தமல்லியில் உள்ள வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் எடுத்தார்.

பணத்தை தனது சரக்கு ஆட்டோவின் டிரைவர் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். நசரத்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்று வண்டிக்கு டீசல் போட்டார். மீண்டும் வண்டியில் ஏறியபோது சீட்டுக்கு அடியில் வைத்து இருந்த பணம் காணாமல்போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கேமராவில் பதிவு

எங்கு தேடியும் பணம் கிடைக்காத நிலையில் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பெட்ரோல் பங்கில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர்.

அப்போது, துரைராஜை பின்தொடர்ந்து 2 மோட்டார்சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். துரைராஜ் வண்டியில் இருந்து கீழே இறங்கி டீசல் போடப் போகும்போது ஒரு வாலிபர் சரக்கு ஆட்டோவின் கதவை திறந்து சீட்டுக்கு அடியில் இருந்த பணப்பையை எடுத்துச்செல்வது பதிவாகி இருந்தது.

4 பேருக்கு வலைவீச்சு

கண்காணிப்பு கேமராவில் பதிவான மோட்டார்சைக்கிள்களின் நம்பர்கள் மற்றும் அந்த நபர்களின் புகைப்படங்களை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

துரைராஜ் வங்கியில் இருந்து பணம் எடுத்ததை கண்காணித்து அவரை பின்தொடர்ந்து வந்து பணத்தை திருடிச்சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

மேலும் செய்திகள்