கூவம் ஆற்றங்கரை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம் மாற்று வீடு வழங்கவில்லை என பொதுமக்கள் புகார்
கூவம் ஆற்றங்கரை ஓர ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சென்னை,
சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் கூவம் ஆற்றங்கரை ஓரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் ஒரு பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்தது.
இதையடுத்து கூவம் ஆற்றங்கரை ஓரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
நுங்கம்பாக்கம், மேற்கு, கிழக்கு நமச்சிவாயபுரம், ரங்கூன் தெரு, மக்கிஸ் கார்டன், திடீர் நகர் போன்ற கூவம் கரையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன.
அங்கு குடியிருந்த சுமார் 1,492 பேருக்கு பெரும்பாக்கத்தில் மாற்று வீடுகள் குடிசை மாற்று வாரியம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் செனாய்நகரில் உள்ள அவ்வைபுரம், அப்பாராவ் கார்டன் 1, 2, 3 ஆகிய தெருக்களில் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருந்தவர்களை அகற்றும் பணியில் கடந்த சில நாட்களாக பெருநகர சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
மாற்று வீடுகள் வழங்க வேண்டும்
அவ்வைபுரத்தில் ஏற்கனவே 134 வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பெரும்பாக்கத்தில் மாற்று வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் சிலருக்கு மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை என்ற புகார் எழும்பியுள்ளது. இதுகுறித்து அவ்வைபுரத்தை சேர்ந்த செந்தில் குமார், சுலேகா, கண்ணன் ஆகியோர் கூறியதாவது:-
கூவம் கரையோரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை நாங்கள் தடுக்கவில்லை. அரசு நல்ல எண்ணத்துடன் தான் செய்கிறது. ஆனால் எங்களுக்கு மாற்று வீடு தருவதாக கூறி வழங்காதது தான் ஏமாற்றம் அளிக்கிறது. இதில் சில இடைத்தரகர்கள் ஈடுபட்டு, வீடு வழங்க ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூலித்து இருக்கிறார்கள்.
எங்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளை திருச்சி, கோவையை சேர்ந்தவர்கள் வாங்கி இருக்கிறார்கள். அது எப்படி அவர்களுக்கு கிடைத்தது?. இடைத்தரகர்களாக செயல்பட்டுவரும் சிலரும், வீடுகளை வாங்கி இருக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்து, சம்பந்தப்பட்ட நபரான சேத்துப்பட்டை சேர்ந்த நந்தினி என்பவரை பிடித்து கொடுத்து இருக்கிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மாற்று வீடுகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இடிக்கப்படும்
செனாய்நகர் அப்பாராவ் கார்டன் 1, 2, 3 தெருக்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முறையாக அறிவிப்பு வழங்கி, மாற்று வீடு ஒதுக்கப்பட்டவர்களுக்கு, மாநகராட்சியின் வாகன உதவியுடன் வீடுகள் காலி செய்யப்பட்டு வருகிறது.
இன்னும் 3 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருப்பவர்களை வெளியேற்றும் பணி முடிவுபெறும் என்றும், அதன் பிறகு வீடுகளை இடிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.