வங்கி லாக்கரில் இருந்த கோவில் நகைகள் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

போடியில் வங்கி லாக்கரில் இருந்த கோவில் நகைகள் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2017-12-07 23:15 GMT
போடி,

போடியில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. ஜமீன்தார்கள் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு பக்தர்கள் நன்கொடையாக அளித்த தங்கம் மற்றும் ரொக்க பணத்தை கொண்டு 1970 கிராம் எடை கொண்ட தங்க கவசம் செய்யப்பட்டது. இந்த தங்க கவசம் அப்போதைய கோவில் பரம்பரை அறங்காவலரான போடி ஜமீன்தாரிணி முத்து வீர சுருளியம்மாள் பெயரில் போடியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போடியை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில், தங்க கவசம் கோவிலில் ஒப்படைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு, தங்க கவசத்தை மீட்டு கோவில் தக்காரிடம் ஒப்படைக்க வேண்டும் என மனு அனுப்பினார். இதனையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள் வங்கி நிர்வாகத்தில் பேசி லாக்கரை ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மதுரை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், தேனி மாவட்ட கோவில்கள் ஆய்வாளர் அய்யம்பெருமாள், போடி சுப்பிரமணிய சாமி கோவில் தக்கார் கிருஷ்ணவேணி, கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், ஜமீன்தாரிணி முத்துவீர சுருளியம்மாள் ஆகியோர் முன்னிலையில், வங்கி லாக்கர் திறக்கப்பட்டது. அதில் தங்க கவசம் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. பின்னர் தங்க கவசத்தை கோவில் அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்த அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். பின்னர் லாக்கரில் வைத்தனர்.

மேலும் செய்திகள்