திருப்புவனம் வைகை ஆற்றில் நுரை படர்ந்த தண்ணீர் வந்ததால் பரபரப்பு

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருப்புவனம் பகுதியில் நுரை கலந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-12-07 22:30 GMT
திருப்புவனம்,

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக பாய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. பெரியாறு, வைகை அணைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, 2 அணைகளுக்கும் கணிசமாக தண்ணீர் வந்தது.

இந்த நிலையில், விவசாயிகள் கோரிக்கையை அடுத்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து கடந்த 5-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை திருப்புவனம் பகுதியை வந்தடைந்தது.

அப்போது தண்ணீர் கலங்கி, நுரை படர்ந்த நிலையில் திருப்புவனம் வைகை ஆற்றுப் பாலம் வழியாக சென்றது.

இதை அறிந்த மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது காற்று பலமாக வீசியதால் ஆற்றுத்தண்ணீர் மீது படர்ந்திருந்த நுரை ஆங்காங்கே பறந்தது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, “வைகை ஆற்றில் தண்ணீர் வந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் ஆற்றில் தேங்கியிருந்த கழிவுநீருடன் தண்ணீர் கலந்ததால் இதுபோன்று நுரை ஏற்பட்டிருக்கலாம், அல்லது வைகை ஆற்றை ஒட்டியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுநீர் கலந்ததால் நுரை வந்திருக்கலாம். முந்தைய காலங்களில் ஆற்றில் புதுவெள்ளம் வந்தால் சிறிதளவு நுங்கும், நுரையுமாக வரும். அது பார்க்கவே கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். ஆனால் இப்படி சோப்பு நுரை போல் ஆளுயரத்துக்கு வருவது நல்லதாகத்தெரியவில்லை. எனவே இனியாவது வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மதுரை நகரில் தான் கழிவுநீர் அதிக அளவில் வைகை ஆற்றில் கலந்து வருகிறது. இதை தடுக்கவேண்டும்” என்றனர்.

மேலும் செய்திகள்