நள்ளிரவில் கோர விபத்து: பலியான நாகர்கோவிலை சேர்ந்த 10 பேர் பற்றிய உருக்கமான தகவல்கள்

மணப்பாறை அருகே நள்ளிரவில் நடந்த கோர விபத்தில் பலியான நாகர்கோவிலை சேர்ந்த 10 பேர் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2017-12-07 23:00 GMT
திருச்சி,

குமரி மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை தோவாளையை சேர்ந்த ராகேஷ் என்பவர் ஓட்டினார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி பிரிவு சாலையில் சென்றுகொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். ஜன்னல், கதவினை மூடியிருந்தனர்.

இந்த நிலையில் வேனுக்கு முன் சென்ற ஒரு போர்வெல் லாரி திடீரென துவரங்குறிச்சி நகருக்குள் செல்வதற்காக திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக போர்வெல் லாரியின் பின்பகுதியில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேன் நொறுங்கியது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுவன், சிறுமி உள்பட 10 பேர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் 5 பேரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

இந்த கோர விபத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்து நின்றன.

இறந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் பெயர், விவரம் உடனடியாக தெரியாமல் இருந்தது. ஆனால் வேன் குமரி மாவட்டத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்றது மட்டும் முதலில் தெரியவந்தது. இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விபத்தில் சிக்கிய அனைவரும் குமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அழகப்பபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக சென்றபோது இந்த பரிதாப சம்பவம் ஏற்பட்டு உள்ளது.

பலியானவர்கள் விவரம்

பலியானவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1. சங்கரகுமார் (வயது 43), புன்னார்குளம், அழகப்பபுரம்.

2. இவருடைய மகன் நந்தீஸ் (5).

3. வைத்தியலிங்கம் (68), செட்டிகுளம், நாகர்கோவில்.

4. இவருடைய மனைவி புஷ்கலா (62).

5. நடராஜன் (44), நாகராஜா கோவில் கீழரத வீதி, நாகர்கோவில்.

6. இவருடைய மகள் ஜெயசந்தியா (10).

7. ஈஸ்வரன் (38), செட்டிகுளம், நாகர்கோவில்.

8. இவருடைய மனைவி நீலா (25).

9. அய்யப்பன் (48), வடசேரி, நாகர்கோவில்.

10. இவருடைய மனைவி சொர்ணம் (44).

காயம் அடைந்தவர்கள் விவரம்

காயம் அடைந்தவர்கள் விவரம் வருமாறு:-

1. ராகேஷ், வேன் டிரைவர்.

2. கார்த்திக் (12), அழகப்பபுரம்.

3. தனம்மாள் (42), பலியான நடராஜனின் மனைவி.

4. வைஷ்ணவி (21), பலியான அய்யப்பனின் மகள்.

5. வேலாதேவி, பலியான சங்கரகுமாரின் மனைவி.

காயம் அடைந்தவர்களில் வைஷ்ணவி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய அனைவருமே வைத்தியலிங்கத்தின் உறவினர்கள் ஆவர். இந்த நிலையில் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக வேனில் புறப்பட்டு இருக்கிறார்கள். அப்போது துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

வைத்தியலிங்கம் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பலியானவர்களில் சங்கரகுமார் உசரவிளை டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நடராஜன் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். ஈஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். திருப்பதி செல்வதற்காக விடுமுறை எடுத்து ஊருக்கு வந்திருந்தார். சில தினங்களில் மீண்டும் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் அவர்களுடையே உறவினர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது. அவர்களது வீடுகளில் கேட்கும் அழுகைசத்தம் அப்பகுதி முழுவதிலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்