திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் 75 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் 75 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.;

Update: 2017-12-07 22:45 GMT
திருச்சி,

திருச்சி காந்திமார்க்கெட், மரக்கடை, வெல்லமண்டி, வெங்காய மண்டி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடை யூறாக சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று காலை மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் வைத்யநாதன், உதவி நிர்வாக பொறியாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலையில் சுமார் 100 ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

2 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 2 லாரிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வெங்காய மண்டி, வெல்லமண்டி, கமான் வளைவு, காந்திமார்க்கெட் பஸ் நிறுத்தம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக நடத்தப்பட்டு வந்த சுமார் 75 கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. சில கடைகள் முன் போடப்பட்டு இருந்த கீற்று மற்றும் தகர கொட்டகைகளும் அகற்றப்பட்டன.

எம்.ஜி.ஆர். சிலை அமைந்துள்ள மரக்கடை இறக்கத்தில் நாற்காலி, மேஜை, பெஞ்சு மற்றும் மர பலகைகள் தயாரிப்பில் ஈடுபட்ட வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்