பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கிய அரையாண்டு தேர்வினை பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதினர். தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பன உள்ளிட்டவை குறித்து அறிய தேர்வு மையங்களை கல்வி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2017-12-07 22:30 GMT
பெரம்பலூர்,

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவ, மாணவிகள் அரசுபொதுத்தேர்வினை சிறப்பாக எழுதுவதை குறிக்கோளாக கொண்டு தங்களை பலவகையில் தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவித்தது போல் தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கியது.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நடந்த தமிழ் முதல் தாள் தேர்வில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த தேர்வானது முழுஆண்டு தேர்வுக்கு முன்னோட்டமாக இருப்பதால் காலை முதலே பள்ளிக்கு வந்து மாணவர்கள் தாங்கள் படித்ததை மீண்டும் ஒருமுறை திருப்பி பார்த்தும், சக நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டும் தெளிவுபடுத்தி கொண்டனர்.

சந்தேகத்திற்குரிய கேள்விகள் குறித்து...

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சரியாக காலை 10 மணிக்கு தமிழ் முதல் தாள் தேர்வு தொடங்கியது. முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசிக்கவும், விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் நேரம் ஒதுக்கப்பட்டது. 10.15 மணியிலிருந்து மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டனர். பிளஸ்-1 மாணவர்களுக்கு மதியம் 12.45-க்கும், பிளஸ்-2 மாணவர்களுக்கு மதியம் 1.15-க்கும் தேர்வு நிறைவடைந்தது. அதன் பின்பு தேர்வறையில் இருந்து வெளியே வந்து சந்தேகத்திற்குரிய கேள்விகள் குறித்து ஆசிரிய, ஆசிரியைகளிடம் மாணவர்கள் கேட்டு தெரிந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-ம் தாள் தேர்வு நடக்கிறது. பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 23-ந்தேதி தேர்வு நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு வருகிற 11-ந்தேதி அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெறுகிறது.

கல்வி அதிகாரிகள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காரை, பாடாலூர், சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு சென்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி, அரையாண்டு தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பது குறித்தும், தேர்வு எழுத போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அரையாண்டு தேர்வில் மாணவ-மாணவிகளின் வருகை விகிதம் குறித்தும் அந்தந்த பள்ளிகளில் கேட்டு அவர் தெரிந்து கொண்டார். இதே போல் மாவட்ட கல்வி அதிகாரி பிருதிவிராசன் உள்ளிட்ட அதிகாரிகளும் தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்