புதர்மண்டி கிடக்கும் தண்ணீர் தொட்டி: குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுவதால் பொதுமக்கள் அச்சம்

வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி புதர்மண்டி இருப்பதால் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;

Update: 2017-12-07 22:00 GMT
நெய்க்காரப்பட்டி,

பழனியை அடுத்த பெருமாள்புதூர் அருகே உள்ள தொட்டிமடை வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை குடியிருப்பு பகுதிக்குள் புகாமல் தடுப்பதற்காக வனப்பகுதியை சுற்றிலும் அகழி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வனப்பகுதியின் எல்லைப்பகுதியை வனவிலங்குகள் கடப்பதை அறிந்துகொள்வதற்காக அப்பகுதியில் பிரத்யேக கருவியும் பொருத்தப்பட்டது.
இந்த கருவி மூலம் குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வரும் வனவிலங்குகளை வனத்துறையினர் உடனடியாக அறிந்துகொள்ள முடியும். உடனடியாக அவர்கள், விலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள். மேலும் பொதுமக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்துவார்கள்.

இதைத்தவிர விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் அந்த தொட்டியில் தண்ணீர் நிரம்பி இருக்கும். கோடை காலத்தில் லாரிகள் மூலம் அந்த தொட்டியில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும்.

இந்த நிலையில் தொட்டியில் தண்ணீர் தேங்கி நிற்காத அளவுக்கு மணல் மூடி இருக்கிறது. செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையினால் கூட தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் வனப்பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக தண்ணீரை தேடி காட்டுயானைகள் தொட்டிமடை குடியிருப்பு பகுதிக்கு வரத்தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்ட கருவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. அந்த கருவிகளை வனத்துறையினர் அகற்றிவிட்டனர்.

போதிய பராமரிப்பு இல்லாததால் வனப்பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் காட்டுயானைகள் குடியிருப்புக்குள் வந்து விடுகின்றன. கடந்த சில வாரங்களாக இரவு நேரத்தில் விவசாய நிலங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்துவிடுகின்றன. காலை வரை அங்கேயே இருக்கும் யானைகள் அதிகாலை நேரத்தில் தான் வனப்பகுதிக்கு செல்கின்றன. எனவே காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்