பேய் விரட்டுவதாக கூறி அக்காள்- தங்கையை அடித்து கொன்ற 11 பேருக்கு ஆயுள் தண்டனை

அக்காள்- தங்கையை அடித்து கொன்ற 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாசிக் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2017-12-06 21:59 GMT
நாசிக்,

அக்காள்- தங்கையை அடித்து கொன்ற 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாசிக் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

பரிதாப சாவு

நாசிக் மாவட்டம் இகாத்புரி தாலுகா தாகே ஹர்ஸ் என்ற பழங்குடியின கிராமத்தை சேர்ந்த பெண் புதிபாய். இவரது சகோதரி காசிபாய். அக்காள்- தங்கை இருவருக்கும் பேய் பிடித்து இருப்பதாக அந்த கிராம மக்கள் கருதினர். இதனால், அந்த கிராமத்தை சேர்ந்த 11 பேர், பேய் விரட்டுவதாக கூறி, இருவரையும் சரமாரியாக அடித்தனர். வலி தாங்க முடியாமல் இருவரும் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து, புதிபாயும், காசிபாயும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அவர்களது உடலை கிராம மக்கள் புதைத்துவிட்டனர். இந்த சம்பவம் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்றது. அவர்களை கொலை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது பில்லி, சூனிய தடை சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் இறுதிகட்ட வாதத்தை கேட்டறிந்த நாசிக் செசன்சு கோர்ட்டு நீதிபதி நந்தேஸ்வர், 11 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்ததுடன், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

மராட்டியத்தில், கடந்த 2013-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பில்லி, சூனிய தடை சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட முதல் தீர்ப்பு இது தான் என்று அரசு வக்கீல் கூறினார்.

மேலும் செய்திகள்