புதுச்சேரியில் ரவுடியாக விரும்பி வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த 3 வாலிபர்கள் கைது

போலீஸ் ரோந்து பணியின் போது வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-06 23:45 GMT

புதுச்சேரி,

போலீஸ் ரோந்து பணியின் போது வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் ரவுடியாக பிரபலமாக வேண்டும் என்பதற்காக குண்டுகளை பதுக்கி வைத்து இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

புதுச்சேரி வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் உத்தரவின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்–இன்ஸ்பெக்டர் கலையரசன், சிறப்பு அதிரப்படைப் படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 3 வாலிபர்கள் அங்கு நின்று கொண்டு இருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சண்முகாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண் என்ற குட்டி (வயது 20), வில்லியனூர் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த பாஸ் என்ற பாஸ்கரன்(31), சூரியா என்ற சூரிய பிரசாத்(20) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை ஆய்வு செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர்களை போலீசார் கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பாஸ் என்ற பாஸ்கரன் மீது வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு இருப்பது தெரியவந்தது. பிடிபட்ட அருண் என்ற கட்டி சண்முகாபுரம் பகுதியில் ரவுடி போல செயல்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த அரசு ஊழியரான பெருமாள் மீது 4 பேர் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகின்றனர்.

தான் குடியிருக்கும் பகுதிக்கு வந்து வெடிகுண்டை வீசிச்சென்றவர்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி சண்முகபுரம் பகுதியில் ரவுடியாக பிரபலம் ஆக வேண்டும் என்று அருண் திட்டமிட்டு இருந்துள்ளார். இதற்காக 2 நாட்டு வெடிகுண்டுகளை பாஸ்கரன் மூலம் தயாரித்து வாங்கி வைத்து இருந்த திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அருண் உள்பட 3 பேரையும் கோரிமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்கச்செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் செய்திகள்