பள்ளி கட்டிடம் இடிந்து பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் முதல்–அமைச்சர் அறிவிப்பு
புதுவை சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தொண்டமாநத்தம் அரசு பள்ளியின் பழுதடைந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்கும்போது சிவபாரதி, அய்யனார் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சருடன் சம்பவம் இடத்திற்கு சென்று பார்வையிட்டேன்.
இந்த சம்பவத்தில் பலியான சிவபாரதி, அய்யனார் ஆகியோரின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறி உள்ளேன். மேலும் சிவபாரதி, அய்யனார் ஆகியோரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதேபோல் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், விபத்தில் காயமடைந்த ராமனுக்கு ரூ.1 லட்சமும் முதல்–அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
இந்த சம்பவம் காரணமாக ஒப்பந்ததாரர், பொக்லைன் ஓட்டுனர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இதுதொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும். அரசு ஊழியர் மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களது கோரிக்கையை அரசு கவனிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.