வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக புதுவை ஏஜெண்டை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-12-06 21:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்தவர் விக்டோரியா பிரேமா(வயது 55). வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் கடந்த 2016–ம் ஆண்டு மே மாதம் 11 பேர் கனடா நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்து விக்டோரியா பிரேமா லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

பின்னர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்டாக செயல்படும் தியாகுமுதலியார்வீதியை சேர்ந்த அஸ்வின் பாலு என்பவர் மூலம் 11 பேரையும் கனடா நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக ரூ.65 லட்சம் பணம் மற்றும் ஆவணங்களை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட அஸ்வின் பாலு அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கனடா செல்வதற்காக பணம் கொடுத்த 11 பேரும் விக்டோரியா பிரேமாவிடம் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டனர். அப்போது அவர் அஸ்வின் பாலுவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பணத்தை தராமல் இழுத்தடித்தார். இதனால் மோசம் போனதை அறிந்த விக்டோரியா பிரேமா இதுகுறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார். அதில், ‘கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி அஸ்வின் பாலு தன்னிடம் ரூ.65 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து விட்டதாக கூறியுள்ளார்’.

புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்வின் பாலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்