பாபர் மசூதி இடிப்பு தினம்: தூத்துக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தூத்துக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-12-06 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பயங்கரவாத எதிர்ப்பு நாள், மதவாத அரசியலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் யூசுப் தலைமை தாங்கினார். செயலாளர் பீரப்பா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி முஸ்ஸமில், த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் நாசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் சனாவுல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் காதர்மைதீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாநில அமைப்பு செயலாளர் அருந்ததிஅரசு, தமிழ்ப்புலிகள் மாவட்ட செயலாளர் தாஸ் ஆகியோர் பேசினர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பாபர் மசூதிக்கு நீதி கோரி ராஜாஜி பூங்கா முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அஷ்ரப்அலி பைஜி தலைமை தாங்கினார். துணை தலைவர் முகமது அலி, பொதுச்செயலாளர் காயல் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி மாநில பேச்சாளர் சாகுல் ஹமித் உஸ்மானி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு.தமிழப்பன், சுந்தரிமைந்தன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு உறுப்பினர்கள் செய்யதுஅலி ஹாஜா, காதர் மைதீன், இம்மானுவேல், மியாகான் சேக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பாசில் சமீர், கல்வத் அகமது கபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மைதீன் கனி நன்றி கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டித்தர வலியுறுத்தி திருச்செந்தூர் ரோட்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செய்யது சம்சுதீன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் முஸ்தபா கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கத்தார் பாலு, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட துணைத்தலைவர் முகமது தவுபீக், பொருளாளர் முகமது ஜான், துணை செயலாளர் அமீர், மருத்துவர் அணி முகமது அன்சர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மாநகர துணை செயலாளர் மகபூப் பாட்ஷா நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்