ஈரோட்டில், பொருட்கள் முறையாக வினியோகிக்க கோரி 2 ரேஷன் கடைகளை பொதுமக்கள் முற்றுகை
ஈரோட்டில், பொருட்கள் முறையாக வினியோகம் செய்யக்கோரி 2 ரேஷன் கடைகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் சிந்தன்நகர், வண்டியூரான் கோவில் வீதி, கமலாநகர், ராமமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 1,200 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கடைகளில் ரேஷன் பொருட்கள் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறியும், முறையாக வினியோகிக்க கோரியும் அந்த பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘இங்கு உளுந்து, பருப்பு, பாமாயில் போன்றவை சரியாக வினியோகிக்கப்படவில்லை. 3 லிட்டர் மண்எண்ணெய் வழங்குவதற்கு பதிலாக 2 லிட்டர் மட்டுமே வழங்குகிறார்கள். மேலும் சில பொருட்களை வாங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்’ என்றனர்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ‘சர்க்கரை, பாமாயில் போன்றவை வினியோகத்துக்கு வந்துள்ளது. ஆனால் அவைகள் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் வைத்துள்ள எந்திரத்தில் சரக்கு இருப்பு காண்பிக்கவில்லை. இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் கேட்டதற்கு ‘நெட்வொர்க்’ முறையாக வேலை செய்யவில்லை. பழுது ஏற்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள். அவைகள் சரிசெய்யப்பட உடன் பொதுமக்களுக்கு பொருட்கள் சீராக வினியோகம் செய்யப்படும்’ என்றனர்.