பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முஸ்லிம் முன்னேற்ற கழகம் –எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-06 23:00 GMT

ஈரோடு,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி ஈரோட்டில் காளைமாடு சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சித்திக் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி மாநில தொழிலாளர் அணி செயலாளர் சம்சுதீன் சேட், சமூக எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் நா.விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பாபர் மசூதி வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாவட்ட செயலாளர்கள் சிந்தனை செல்வன் (தமிழ் புலிகள்), சலீம் (மனிதநேய மக்கள் கட்சி), பொருளாளர் இலியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பர்ஹான் அகமத் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முகமது ஹஸன் அலி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் உபைதுல்லா, ‌ஷபியா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வநாதன், எஸ்.டி.பி.ஐ. கட்சி பொறுப்பாளர்கள் சையது முகமது, அப்துல் முனாப், அப்துல் ரஹ்மான், முகமது மன்சூர் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்