பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தரக்கோரி த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தரக்கோரி த.மு.மு.க. மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றன. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

Update: 2017-12-06 22:30 GMT

திருப்பூர்,

பாபர் மசூதி வழக்கை விரைந்து முடித்து முஸ்லிம்களிடம் இடத்தை ஒப்படைக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அறிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் ரெயில் நிலையம் முன் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் ஹைதர் அலி கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தமிழர் விடியல் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் முகமது யாசர், திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆறுமுகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையத் முஸ்தபா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழ.சண்முகம், தமிழர் வாழ்வுரிமை கட்சியின் சந்தோஷ் கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தரக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். பெண்கள் திரளானவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க.மாவட்ட செயலாளர் அஸ்கர் அலி, த.மு.மு.க. பொருளாளர் முத்துமீரான், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் மஜீத் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் பைசல் ரகுமான் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் கயல்விழி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாநகரின் பல பகுதிகளில் இருந்து வேன்களில் வந்தனர். போலீஸ் வாகனங்கள் முன் செல்ல வேன்கள் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கு வந்து சேர்ந்தன. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் இதுபோல் பாதுகாப்புடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதேபோல் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் நீதி கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் காங்கேயம் ரோடு சி.டி.சி. டெப்போ அருகே நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முஜிபுர் ரகுமான் வரவேற்றார். துணை தலைவர் அப்துல் நாசர், செயலாளர் ஹபிபுர்ரகுமான், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹபிபுர்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் உமர் பாரூக் ஆகியோர் பேசினார்கள். முடிவில் மாவட்ட செயலாளர் அபுதாஹீர் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்