திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரி கரையில் விரிசல் ஏற்பட்ட பகுதியை கலெக்டர் நேரில் ஆய்வு

திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரிக்கரையில் விரிசல் ஏற்பட்ட பகுதியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-12-06 22:15 GMT

விருத்தாசலம்,

திட்டக்குடி அருகே கீழ்செருவாயில் வெலிங்டன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 1918–ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. மொத்த கொள்ளளவு 29.72 அடியாகும். அதாவது 2 ஆயிரத்து 580 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

தற்போது பெய்த பருவமழையால், ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் தற்போது ஏரி நீர்மட்டம் 16.5 அடியாக இருக்கிறது. அதாவது 519 மில்லியன் கன அடி என்கிற நிலையில் தண்ணீர் இருப்பு உள்ளது.

இந்நிலையில் ஏரியில் ரூ.6½ கோடி செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்று இருந்தது. இப்பணி நடந்த ஏரிக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுமோ என்று கரையோரம் உள்ள 20 கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொக்லைன் எந்திரம் மூலம் ஏரி கரையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் நேற்று ஏரிக்கு சென்று, பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த விவசாயிகள், கலெக்டரிடம் ஏரி மூலம் அனைத்து பகுதிகளுக்கும் பாசன வசதி கிடைக்கும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

மேலும் தொடர்ந்து மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஏரியை பொதுப்பணித்துறை அதிகரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் ஏரிக்கரை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அருகில் உள்ள கிராம மக்கள் எந்தவித பயமும் கொள்ள தேவையில்லை என்றும் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார். ஆய்வின் போது அவருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்