பெண்ணாடத்தில் சிமெண்டு மூட்டைகளுடன் லாரி கடத்தல்
சிமெண்டு மூட்டைகளுடன் கடத்தி வந்த லாரியை நடுவழியில் நிறுத்தவிட்டு ஓடிய மர்ம மனிதரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெண்ணாடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருத்தாசலம்,
பெண்ணாடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு பெண்ணாடம் போலீஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக திட்டக்குடி பகுதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தினர்.
ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல், அங்கிருந்து வேகமாக ஓட்டி சென்றார். இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார், தங்களது வாகனத்தில் வேகமாக துரத்தி சென்றனர். அப்பேது பெண்ணாடம் அடுத்த பெலாந்துறை கிராமத்தில், நடுவழியில் லாரியை நிறுத்திவிட்டு, அதை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து போலீசார் லாரியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.
விசாரணையில், அந்த லாரி பெண்ணாடம் அருகில் உள்ள கொத்தட்டையை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான லாரி என்பது தெரியவந்தது. மேலும் இந்த லாரியில் அரியலூர் மாவட்டம் தளவாயில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு தொழிற்சாலையில் இருந்து சிதம்பரத்துக்கு 200 மூட்டை(10 டன்) சிமெண்டு ஏற்றி வந்துள்ளனர். இதை கீரமங்கலத்தை சேர்ந்த டிரைவர் இளங்கோவன்(50) என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது தளவாயில் சாலையோரம் இருந்த ஒரு கடையில் சாப்பிடுவதற்காக, லாரியை இளங்கோவன் அங்கு நிறுத்தியுள்ளார். இதை பயன்படுத்தி மர்ம மனிதர் ஒருவர் லாரியை அங்கிருந்து கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் பெண்ணாடத்தில் போலீசார் வாகன சோதனை செய்த போது, போலீசில் பிடிபடாமல் இருக்க லாரியை வேகமாக ஓட்டி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிமெண்டு மூட்டைகளுடன் லாரியை கடத்தி வந்த மர்ம மனிதரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.