வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவலம் அருகே உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தியுடன் கூடிய கரும்பு அரவையை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

Update: 2017-12-06 22:45 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

திருவலம் அருகே உள்ள அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. 2017-18-ம் ஆண்டிற்கான அரவை பருவம் தொடங்கியதை அடுத்த நேற்று கரும்பு அரவை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் கோரந்தாங்கல் குமார் தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் ராமன் கலந்து கொண்டு இணை மின் உற்பத்தியுடன் கூடிய கரும்பு அரவையை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆலையின் தலைவர் கோரந்தாங்கல் குமார் கூறுகையில், ‘ஆலையில் தினமும் 15 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இணை மின் திட்டம் கொண்டது. 2016-17-ம் ஆண்டில் 58 ஆயிரத்து 86 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 1 லட்சத்து 15 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினமும் 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்து ஆலைக்கு 4 மெகாவாட் தேவை போக மீதம் உள்ள 11 மெகாவாட் தமிழ்நாடு மின்சாரத்துறைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.

நிகழ்ச்சியில் ஆலையின் துணை தலைவர் ரங்கநாதன், அலுவலக மேலாளர் சுப்பிரமணி, கரும்பு விரிவாக்க அலுவலர் விவேகானந்தன், ரசாயனர் செங்குட்டுவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்