அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி மத்திய அரசுக்கு சிவசேனா அமைப்பினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சிவசேனா அமைப்பு சார்பில் மத்திய அரசுக்கு தபால் அனுப் பும் போராட்டம் ஊட்டி புளுமவுண்டன் சாலையில் உள்ள கிளை தபால் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.சி.சுரேஷ்குமார், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, பதிவு தபால் மூலம் 6 தபால்களை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு சிவசேனா அமைப்பினர் அனுப்பினர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:–
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பா.ஜனதா அரசு உறுதியளித்து உள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசு இந்துக்களை ஏமாற்றாமல், ராமர் கோவிலை விரைவாக கட்ட வேண்டும். சமீபத்தில் அயோத்தி சென்ற உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் லோக்சபாவில் பா.ஜனதாவிற்கு போதிய பலம் இருந்தாலும், ராஜ்யசபாவில் பலம் இல்லாததால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடியவில்லை என்று தெரிவித்து உள்ளார்.
இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்து உள்ளது. பா.ஜனதா அரசு அளித்த உறுதியை காப்பாற்ற வேண்டியது கடமை. எனவே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதில் மாவட்ட பொருளாளர் சத்தீஷ்பாபு, அமைப்பாளர் வினோத்குமார், இந்து திருக்கோவில் பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.