ஓடும் ரெயிலில் நகைப்பட்டறை மேலாளரை தாக்கி நகைகள் கொள்ளையடித்த 7 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

ஓடும் ரெயிலில் நகைப்பட்டறை மேலாளரை தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் பட்டீல் தெரிவித்தார்.

Update: 2017-12-06 21:30 GMT

மங்களூரு,

ஓடும் ரெயிலில் நகைப்பட்டறை மேலாளரை தாக்கி நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் பட்டீல் தெரிவித்தார்.

மேலாளரை தாக்கி 4 கிலோ நகைகள் கொள்ளை

உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீப் பட்டீல் நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மராட்டிய மாநிலம் மும்பையில் தனியார் நகைப்பட்டறை உள்ளது. இங்கு மேலாளராக வேலை பார்த்து வருபவர் ராஜேந்திர சிங். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 17–ந்தேதி தங்க நகைகளை விற்பனை செய்ய கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.

அந்த ரெயில், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் படுபித்ரி ரெயில் நிலையம் மற்றும் மங்களூரு தாலுகா சூரத்கல் ரெயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் ரெயிலில் ஏறிய மர்மநபர்கள், துப்பாக்கி முனையில் ராஜேந்திர சிங்கை மிரட்டியும், அவரை தாக்கியும் அவர் தங்க நகைகள் வைத்திருந்த சூட்கேசை கொள்ளையடித்து சென்று விட்டனர். அந்த சூட்கேசில் ரூ.1 கோடியே 28 லட்சத்து 32 ஆயிரத்து 216 மதிப்பிலான 4 கிலோ தங்க நகைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

7 பேர் கைது

இதுபற்றி ராஜேந்திர சிங், படுபித்ரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் தலைமறைவான மர்மநபர்களை கேரளா, மராட்டிய மாநிலங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், பிடிபட்டவர்கள் மராட்டியத்தை சேர்ந்த (தற்போது குடகு மாவட்டம் மடிகேரியில் வசித்து வந்தார்) மிதுன் வனியன் என்கிற பைரவ் சிங் ரானா என்கிற ரோகித் ஷெட்டி (வயது 31), பீகார் மாநிலத்தை சேர்ந்த பிண்டு அர்ஜுன் சவுத்ரி (32), ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரை சேர்ந்த யோகேஷ்வர் (24), பிரபு லால் குர்ஜார் (30), கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த முக்தார் இப்ராகிம் (24), ரியாஜ் (30), கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பி.கே.முருகன் (49) ஆகியோர் என்பது தெரியவந்தது.

பணியில் இருந்து நீக்கியதால் ஆத்திரம்

கைதானவர்களில் மிதுன், பிண்டு ஆகிய 2 பேரும் நவம்பர் 21–ந்தேதி பிடிபட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மற்றவர்களை கைது செய்துள்ளோம். கைதானவர்களில், யோகேஷ்வர், ராஜேந்திர சிங் மேலாளராக பணியாற்றும் நகைப்பட்டறையில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் மோசடியில் ஈடுபட்டதாக அவரை அந்த நகைப்பட்டறை அதிபர் பணியில் இருந்து நீக்கிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த யோகேஷ்வர், நகைப்பட்டறையில் இருந்து விற்பனைக்கு கொண்டு செல்லும் தங்க நகைகளை கொள்ளையடிக்க திட்டம் போட்டார். இதற்கான திட்டத்தை தேவராஜ் தாக்கூர் என்பவர் வகுத்து கொடுத்துள்ளார்.

இந்த கொள்ளை திட்டத்துக்கு அதே நகைப்பட்டறையில் ஊழியராக வேலை பார்த்து வந்த பிரபு லால் குர்ஜார் உதவி செய்துள்ளார். இவர் தான், ராஜேந்திர சிங் கேரளாவுக்கு 4 கிலோ தங்க நகைகளுடன் செல்வதை யோகேஷ்வருக்கு கூறியுள்ளார். அதைதொடர்ந்து யோகேஷ்வர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓடும் ரெயிலில் துப்பாக்கி முனையில் ராஜேந்திர சிங்கை தாக்கியும், மிரட்டியும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். யோகேஷ்வர் நகைப்பட்டறைக்கு சொந்தமான தங்க நகைகளை ஏற்கனவே 2 தடவை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 3–வது முயற்சியில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

கைதானவர்களிடம் இருந்து ரூ.31 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகள், நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள், தங்கத்தை உருக்கும் எந்திரம், 6 செல்போன்கள், ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த கொள்ளை வழக்கில் தேவராஜ் தாக்கூர் உள்பட மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரொக்கப் பரிசு

ஓடும் ரெயிலில் நகைப்பட்டறை மேலாளரிடம் கொள்ளையடித்த வழக்கில் திறம்பட செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த போலீசாருக்கு, மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஹேமந்த் நிம்பல்கர் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

மேலும் செய்திகள்