ஆர்.கே.நகர் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மதுரை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார்.

Update: 2017-12-06 23:15 GMT

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஒகி புயலால் குமரி மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புயலின்போது காணாமல் போன குமரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல், மழை உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மீனவர்களுக்கு அதிநவீன கருவிகளை கொடுக்க வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்ட்டர் தளம் அமைத்து எப்பொழுதும் அங்கு ஒரு ஹெலிகாப்ட்டரை நிறுத்தி வைக்க வேண்டும்.

இதுபோன்று உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். புயல் சேதத்திற்கு ரூ.25 கோடிக்கு மேல் வழங்க வேண்டும். மாநில அரசு தேவையான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று குமரி மாவட்டத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையின்போதே பல்வேறு குழப்பம், புகார் வருவதால் தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் அதிகாரியின் முடிவு இறுதியான முடிவானது. ஆனாலும் உரிய நீதி கிடைக்காவிட்டால் சட்டத்தின்படி நியாயத்தை பெற வேண்டுமெனில் வேட்பாளர்கள் நீதிமன்றத்தை நாடலாம். ஜனநாயக நாட்டில் அதற்கு மேல் உயர்ந்த இடமில்லை. வாக்காளர்கள் தங்களிடமுள்ள துருப்பு சீட்டான வாக்கை சரியாக பயன்படுத்தினால் ஜனநாயகம் தழைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்