அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்ற பிறகு கர்நாடகத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார், ராகுல் காந்தி

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்ற பிறகு ராகுல் காந்தி கர்நாடகத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

Update: 2017-12-06 21:15 GMT

பெங்களூரு,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்ற பிறகு ராகுல் காந்தி கர்நாடகத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 19–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இந்த பதவிக்கு ராகுல் காந்தி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து அன்றைய தினம் அதாவது 19–ந் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறார்.

அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். அரசியலில் இந்திரா காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டபோது அவர் கர்நாடகத்தில் உள்ள சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அவர் செல்வாக்கு மிக்க தலைவியாக உருவெடுத்தார்.

பிரமாண்ட பொதுக்கூட்டம்

அதே போல் தற்போது அரசியலில் கடினமான நிலையை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க ராகுல் காந்தி தனது சுற்றுப்பயணத்தை கர்நாடகத்தில் இருந்து தொடங்குகிறார். இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் ராகுல் காந்தி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த மாத இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ ராகுல் காந்தி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கட்சி நிர்வாகிகளுடன் ஒரு சுற்று ஆலோசனை நடத்தி இருக்கிறார். ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் அவரது பயணத்தின் ஆரம்பமாகவும், கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவும் கருதப்படும். எனவே இந்த பொதுக்கூட்டத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் நிர்வாகிகள் நிர்வாகிகள் இப்போது இருந்த அதற்கான வேலைகளில் இறஙகியுள்ளனர்.

மேலும் செய்திகள்