பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி புதுவயலில் விவசாயிகள் சாலை மறியல்
பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி காரைக்குடி அருகே புதுவயலில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் முற்றிலும் கருகி போனது. இதனையடுத்து பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க அரசு உத்தரவிட்டது. ஆனால் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு இன்றளவும் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி நேற்று விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சாக்கோட்டை போலீசார் மற்றும் தாசில்தார் மகேஸ்வரன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் வருகிற 21–ந்தேதிக்குள் பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இருப்பினும் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், புதுவயல் தி.மு.க. நகர செயலாளர் சுப.சின்னத்துரை, சாக்கோட்டை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாண்டித்துரை, மாவட்ட குழு உறுப்பினர் மணக்குடி சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ராஜேந்திரன் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.