திருவள்ளூர் அருகே பதுக்கி வைத்திருந்த 20 யூனிட் மணல் பறிமுதல்
திருவள்ளூர் அருகே பதுக்கி வைத்திருந்த 20 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து சிலர் மணலை திருடி வந்து ஒரு இடத்தில் பதுக்கி வைத்து கடத்தி செல்வதாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இது பற்றி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் நேற்று திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூண்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கடும் நடவடிக்கை
அப்போது அங்கு ஒரு இடத்தில் 20 யூனிட் மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் அந்த 20 யூனிட் மணலை அங்கேயே மூட்டைகளாக கட்டி மழைக்காலங்களில் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் அடைப்பதற்காக திருவள்ளூரில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
இது போன்று மணலை சேமித்து வைத்து மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் எச்சரித்தார்.