தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்க அனுமதிக்காததால் சுயேச்சை வேட்பாளர்கள், முகவர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியை சந்திக்க அனுமதிக்காததால் சுயேச்சை வேட்பாளர்கள், முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியாக வேலுச்சாமி நியமனம் செய்யப்பட்டார். கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவர் பணியை மேற்கொண்டு வருகிறார். நேற்று சுயேச்சை வேட்பாளர்களும், வேட்பாளர்களின் முகவர்களும் தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்திக்க வந்திருந்தனர்.
ஆனால் அவர்களை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இதுதொடர்பாக எடுத்துக்கூறினர். அதன்பின்னர், உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர்.
உள்ளே சென்ற அவர்கள் வெகுநேரம் கழித்து வெளியே வந்தனர். அப்போது அவர்கள், ‘எங்களை உள்ளே அழைத்தும் தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திக்கவில்லை. இது ஜனநாயக படுகொலை’ என்று குற்றஞ்சாட்டினர்.