எய்ட்ஸ் நோயை தடுக்கும் பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

எய்ட்ஸ் நோயை தடுக்கும் பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் பேசினார்.

Update: 2017-12-06 22:45 GMT
தர்மபுரி,

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் பிருந்தா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டவர்களில் 3,857 பேர் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 336.

நடப்பு 2017-ம் ஆண்டில் இதுவரை எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக 256 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். எனவே கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது.

அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தர்மபுரி மாவட்டத்தில் எச்.ஐ.வி. தொற்று அளவு ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் எய்ட்ஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித வேறுபாடும், புறக்கணித்தலும் இன்றி அன்புடனும், அரவணைப்புடனும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கான பணியில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விவேகானந்தன் பேசினார்.

நிகழ்ச்சியில் தர்மபுரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சந்திரசேகர் எச்.ஐ.வி. பரவும் விதம் குறித்தும், நம்பிக்கை மைய பணியாளர்களின் பணி குறித்தும், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விளக்கி பேசினார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பொன்னுராஜ், சந்தர்ப்பவாத நோய்கள் குறித்தும், இந்த நோய்களை தடுக்க மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் தடுப்பு பணிகள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு விவாதம் நடைபெற்றது. எச்.ஐ.வி. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சைகள் மற்றும் சேவைகள் அளித்த மருத்துவ அலுவலர், ஆலோசகர், ஆய்வக நுட்பனர், தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

எச்.ஐ.வி. நோய் தொற்று மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை மற்றும் பாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 103 பேருக்கு உதவித்தொகைக்கான ஆணைகள், எச்.ஐ.வி. தொற்று உள்ள குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த 142 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.3 லட்சத்து 9 ஆயிரம் நிதி ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்