பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம்: நெல்லையில் வீடு, வீடாக சென்று கவர்னர் விழிப்புணர்வு பிரசாரம்

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று நெல்லையில் நேற்று வீடு, வீடாக சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

Update: 2017-12-06 23:15 GMT
நெல்லை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று நெல்லை வந்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 25-வது பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்துக்கு மாலை 3.10 மணிக்கு வந்தார்.

கவர்னருடன் நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர், மாநகர நல அலுவலர் பொற்செல்வன் ஆகியோர் உடன் வந்தனர்.

பஸ் நிலைய வளாகத்துக்கு வந்த உடன் மாநகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) நாராயண நாயர், கவர்னரிடம் கையுறைகளை கொடுத்தார். அதனை கவர்னர் பெற்றுக் கொண்டு தனது கைகளில் மாட்டிக்கொண்ட கவர்னர், பஸ் நிலைய வளாகத்திற்குள் ரோட்டில் கிடந்த குப்பைகளை சேகரித்து குப்பை தொட்டியில் போட்டார். மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், துடைப்பத்தை எடுத்து பஸ் நிலைய வளாகத்தை சுத்தம் செய்தார்.

மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம். குப்பைகளை ரோட்டில் கொட்டக்கூடாது, குப்பைகளை தங்களது கடையில் சேகரித்து வைத்து மாநகராட்சி குப்பை தொட்டியில் போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது நெல்லை மாநகராட்சி சார்பில் அச்சிட்டு தயார் நிலையில் வைத்திருந்த தூய்மை இந்தியா திட்ட துண்டு பிரசுரங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித், அங்கிருந்த பயணிகளிடம் வழங்கினார். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மாணவியிடம் துண்டு பிரசுரத்தை வழங்கி, பொது மக்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாக வாசிக்குமாறு கூறினார்.

கவர்னர் வழிகாட்டுதல்படி அந்த மாணவி பஸ் நிலையத்தில் உள்ள திண்டு மீது ஏறி நின்று துண்டு பிரசுரத்தை படித்தார். முடிவில் அனைவருக்கும் கவர்னர், தமிழில் நன்றி தெரிவித்தார். பின்னர் கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளை பார்த்து நீங்கள் இங்கேயே இருப்பவர்கள். பஸ் நிலையத்துக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை வந்து உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தம் பேணப்படா விட்டால் கடைக்காரர்களை எச்சரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.

இதை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் காரில் ஏறி பாளையங்கோட்டை தெற்கு பஜாருக்கு சென்றார். அங்கு லூர்துநாதன் சிலை அருகில் மாநகராட்சி சார்பில் வைத்திருந்த மக்கும் குப்பை தொட்டி, மக்காத குப்பை தொட்டிகளை பார்வையிட்டார். பின்னர் பெருமாள் கோவில் மேல ரத வீதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்றார். வீடு, வீடாக சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றி தெரியுமா? மாநகராட்சி அதை பிரித்து சேகரிப்பது பற்றி தெரியுமா? என்று ஆங்கிலத்தில் கேட்டார். அதனை அவருடைய உதவியாளர் தமிழில் மொழிபெயர்த்து கூறினார். அதற்கு பொதுமக்கள் மாநகராட்சி திட்டம் குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், புதன்கிழமை தோறும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிப்பதாகவும் பதில் அளித்தனர்.

அப்போது கவர்னர் அவர்களிடம், பிளாஸ்டிக் கேடு விளைவிப்பதால் பிளாஸ்டிக் பைகளை பயன்படு்த்த வேண்டாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களிடம் பிளாஸ்டிக் கேடு குறித்து எடுத்து கூறுங்கள். குப்பைகளை சேகரித்து வைத்து குப்பை தொட்டியில் போட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் 2 மணி நேரம் ஒதுக்கி மாணவர்களிடம் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பொது மக்களிடம், கவர்னர் கேட்டுக் கொண்டார்.

மேலும் துப்புரவு பணியாளர்களை சந்தித்து, நீங்கள் சுத்தத்தை பேணுவதற்கு நல்ல முறையில் பணிபுரிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது. அதன் பின்னர் கவர்னர், வண்ணார்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். 

மேலும் செய்திகள்