குத்தகை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை

ஆரல்வாய்மொழி அருகே குத்தகை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-12-06 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

ஒகி புயலால் குமரி மாவட்டத்தில் விவசாய பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. சேதமடைந்த நெற்பயிர், தென்னை,  வாழை ஆகியவற்றின் விவரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், நிவாரண தொகைகள் நிலத்தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரல்வாய்மொழி அருகே திருப்பதிசாரம், பீமநகரி போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நிலங்களை குத்தகைக்கு எடுத்து நெல், வாழை போன்றவை பயிரிட்டு இருந்தனர். கடந்த 30–ந் தேதி வீசிய ஒகி புயல், மழையால் இந்த பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்தநிலையில் நிவாரண தொகை முழுவதும் நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு குத்தகை விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து நேற்று திருப்பதிசாரம் கிராம நிர்வாக அலுவலகத்தை ஏராளமான விவசாயிகள் முற்றுகையிட்டனர். அவர்கள் குத்தகை நிலங்களில் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரண தொகையை, பயிரிட்ட விவசாயிகளிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல்  அறிந்த உதவி வேளாண்மை இயக்குனர் ராஜ்குமார், துணை வேளாண் அலுவலர் நாகராஜன், உதவி வேளாண் அலுவலர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்