உளவு வேலை பார்க்கும் தாவரங்கள்

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர்களுக்கு, சக உயிரினங்கள் குறித்த புரிதல் என்பது மிகக் குறைவாகத்தான் இருந்தது.

Update: 2017-12-06 06:32 GMT
சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை மனிதர்களுக்கு, சக உயிரினங்கள் குறித்த புரிதல் என்பது மிகக் குறைவாகத்தான் இருந்தது. அதனால் பெரும்பாலான உயிரினங்களின் பிரத்யேகத் திறன் குறித்து மனிதர்கள் அறிந்திருக்கவில்லை.

உதாரணமாக, காகம் மற்றும் சிலவகை புறாக்களுக்கு கருவி களை மிக நேர்த்தியாக பயன்படுத்தும் திறன் உண்டு என்பதை சமீபகால ஆய்வுகள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. ஆக, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் மனிதர்களாகிய நம்மைச் சுற்றியே வாழும் உயிரினங்களுக்கு நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு பல பிரத்யேகத் திறன்கள் உள்ளன.

அந்த வகையில், தாவரங்கள் என்றால் அவற்றால் நமக்கு உணவு மற்றும் உடை அளிக்க முடியும், கட்டிடங்களுக்கான கட்டுமானப் பொருளான பலகைகளை அளிக்க முடியும் என்றுதான் இதுவரை நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடுகள், வெடிகுண்டு போன்ற ஆபத்துகள் மற்றும் எதிரிகளால் ஏற்படுத்தப்படும் ரசாயனங்களின் அடிப்படையிலான இன்னபிற ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து, நம்மை எச்சரிக்கும் ஒற்றர்களாக செயல்படும் திறன் தாவரங்களுக்கு உண்டு என்று ஆச்சரியப்படுத்துகிறது அமெரிக்காவின் ராணுவ ஆய்வு மையமான டர்பா (Defense Advanced Research Projects Agency (DARPA).

பாரம்பரியமாக, பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் தான் ஒற்றர்களாக செயல்பட்டு வருகிறார்கள். அதனால் மனித உயிரிழப்பு என்பது இத்துறையில் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, தற்போது பல்வேறு வகையான கருவிகள் மற்றும் சென்சார்கள் ஒற்றர்களுக்கு பெரிதும் உதவுகின்றன.

மனித ஒற்றர்களின் உயிர்ச்சேதம் ஒருபுறமிருக்க, தொழில்நுட்ப கருவிகளின் பராமரிப்புக்கு இத்துறையில் பெருமளவு பணம் செலவழிக்கப்படுகிறது. இவற்றைத் தவிர்க்கவே, ஒற்றர்களின் தேவைக்கு தாவரங்களின் உதவியை நாடியுள்ளதாகக் கூறுகிறது ‘டர்பா’.

‘அட்வான்ஸ்டு பிளான்ட் டெக்னாலஜிஸ் அல்லது ஏ.பி.டி. (Advanced Plant Technologies or APT) என்று அழைக்கப்படும் இந்த ‘தாவர ஒற்றர்’ ஆய்வுத் திட்டமானது, ஆபத்தான சுற்றுச்சூழல் மாற்றங்களை சுயமாகக் கண்காணித்து, தகவல் தொடர்பு செய்யும் ஒரு தாவர வலையமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. தாவரங்கள் ஒரு ஆபத்து வருவதற்கு முன்பே அதனைக் கண்டறிகின்ற மற்றும் அந்த ஆபத்து குறித்த தகவலைத் தங்களுக்குள் ‘தகவல் பரிமாற்றங்கள்’ செய்துகொண்டு ஒன்றை ஒன்று எச்சரித்துப் பாதுகாத்துக்கொள்கின்ற பிரத்யேகத் திறன்கொண்டவை என்பது ‘சேஜ் பிரஷ்’ (Sagebrush plant) போன்ற தாவரங்கள் மூலமாக சில ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, ரசாயன வினைகள் அல்லது ரசாயனங்களை வெளியேற்றுவதன் மூலமாக தாவரங்கள் இதனைச் செயல்படுத்துகின்றன என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படும் ஒளி மற்றும் வெப்பம் சார்ந்த மாறுதல்களுக்கு எதிர்வினை புரியும் திறன் தாவரங்களுக்கு இயற்கையாகவே உண்டு என்பதும், மேலும் சில தாவரங்கள் தொடு உணர்வு (தொட்டாற்சுருங்கி போல), ரசாயனங்கள் மற்றும் கிருமித் தொற்றுகளுக்கு எதிரான எதிர்வினை புரியும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்கிறார் டர்பாவின் ஆய்வாளர் ப்ளேக் பெக்ஸ்டின்.

இத்தகைய இயற்கையானத் திறன்களுடன், ஆபத்தான மாறுதல்களை துல்லியமாகக் கண்டறிவது மற்றும் அவற்றை மனிதர்களுடன் தகவல் தொடர்பு செய்வது போன்ற கூடுதல் திறன்களை, தாவரங்களில் மரபணுமாற்றம் செய்வதன் மூலம் அவற்றுக்கு ஏற்படுத்த டர்பா திட்டமிட்டுள்ளது என்கிறார் ப்ளேக். இதன்மூலம், சுற்றுச் சூழலில் ஏற்படும் ஆபத்தான மாற்றங்களைக் கண்டறியும் மரபணு மாற்றத் தாவரங்கள், அது தொடர்பானத் தகவல்களை ஒரு செயற்கைக்கோளுக்கு அனுப்ப, அதன் மூலம் தொலைதூரச் சுற்றுச்சூழல் கண்காணிப்பு என்பது எதிர்காலத்தில் மனித உயிரிழப்பு இல்லாமல் சுலபமாகச் சாத்தியமாகும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இந்த ஏ.பி.டி. திட்டத்துக்கான ஆய்வு ஐடியாக்களை டர்பா தற்போது வரவேற்றுக் காத்திருக்கிறது. அந்த மாதிரியான சூப்பரான ஒரு ஐடியா உங்ககிட்ட இருந்தா உடனே டர்பாவுக்கு ஒரு அப்ளிகேஷனைத் தட்டிவிடுங்க.

மேலும் செய்திகள்