மும்பையில் நடிகர் சசி கபூரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

மும்பையில் நடிகர் சசி கபூரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Update: 2017-12-05 22:30 GMT

மும்பை,

மும்பையில் நடிகர் சசி கபூரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சசி கபூர் மரணம்

இந்தி நடிகர் சசி கபூர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை 5.20 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. இதைத்தொடர்ந்து, அவரது உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஜூகுவில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.

சசி கபூரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பீகார் முதல்–மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

சசி கபூர் மறைவை அறிந்ததும் நடிகர்கள் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிசேக் பச்சன், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி உள்ளிட்ட திரையுலகினர் ஏராளமானோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மறுநாள் காலை (அதாவது நேற்று) அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஷாருக்கான் அஞ்சலி

அதன்படி, நேற்று காலை அவரது உடல் மூவர்ண கொடி போர்த்தப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும், நடிகர்கள் ஷாருக்கான், சாயிப் அலிகான், இயக்குனர் சியாம் பெனிகல், நடிகைகள் நந்திதா தாஸ், லாரா தத்தா உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் திரளாக வந்து அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, காலை 11.45 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஜூகு வீட்டில் இருந்து சாந்தாகுருஸ் இந்து மயானத்துக்கு அவரது உடல் ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்டது. கொட்டும் மழையையும், ஒகி புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், சசி கபூரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டு நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதை

சாந்தாகுருஸ் இந்து மைதானம் வந்ததும், அவரது உடலுக்கு சில நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, வானத்தை நோக்கி போலீசார் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். அரசு மரியாதை நிறைவடைந்ததும், அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த மூவர்ண கொடி அகற்றப்பட்டது. மின்மயானத்தில் சசி கபூரின் உடலுக்கு எரியூட்டப்பட்டது. அவரது மகன்கள் குணால், கரண் உள்பட குடும்பத்தினருக்கு நடிகர், நடிகைகள் ஆறுதல் கூறினர்.

இதனிடையே, சசி கபூரின் வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் நடிகர்கள் அமீர்கான், அனில் கபூர், சஞ்சய் தத், நசிருதீன் ஷா ஆகியோர் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

பழம்பெரும் நடிகரான சசி கபூர் திரையுலகுக்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் அவருக்கு ‘பத்ம பூ‌ஷண்’ மற்றும் ‘தாதாசாகேப் பால்கே’ விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்