காதலியுடன் வந்தவரை மிரட்டி நகை பறிப்பு; போலீஸ் போல் நடித்து கைவரிசை காட்டியவர் கைது

கிருமாம்பாக்கம் அருகே கடற்கரையில் காதலியுடன் வந்தவரை மிரட்டி போலீஸ் போல் நடித்து நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-12-05 22:30 GMT

பாகூர்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 23). தனியார் நிறுவன கார் டிரைவர். சம்பவத்தன்று தனது காதலியுடன் புதுவை கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் கடற்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், தான் போலீஸ் என்று கூறி காதல் ஜோடியிடம் விசாரித்தார். உங்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறிய அவர், பிரதாப்பை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து காதலியை பஸ் ஏற்றி ஊருக்கு அனுப்பிவிட்டு அந்த நபருடன் பிரதாப் தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

பிள்ளையார்குப்பம் சந்திப்பு பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தச்சொன்ன அந்த நபர், நீ அணிந்துள்ள நகையை பார்த்தால் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார் பறித்துவைத்துக் கொள்வார்கள், எனவே நகையை கழற்றி என்னிடம் கொடுத்துவிடு என்று கூறினார். இதை நம்பிய பிரதாப் தான் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி, கால் பவுன் மோதிரம் மற்றும் 500 ரூபாயை அவரிடம் கொடுத்தார். போலீஸ் நிலையத்துக்கு புகார் வாங்க வெள்ளை பேப்பர் தேவைப்படுகிறது. அதனை வாங்கிக்கொடுத்தால் உடனடியாக விசாரித்துவிட்டு உன்னை அனுப்பி விடுவார்கள் என்று அந்த நபர், பிரதாப்பிடம் கூறினார்.

இதையடுத்து அங்குள்ள கடையில் பேப்பர் வாங்க பிரதாப் சென்றுவிட்டு திரும்பிய நிலையில் அந்த நபரை காணவில்லை. அப்போதுதான் போலீஸ் என்று கூறி அந்த நபர் நகை, பணத்தை பறித்துச்சென்ற விவரம் பிரதாப்புக்கு தெரியவந்தது. இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

இதன்பின் மீண்டும் கடலூர் ரோட்டில் பிரதாப் மோட்டார் சைக்கிளில் சென்றார். தன்னிடம் போலீஸ் போல் நடித்து: நகை பறித்த ஆசாமி முள்ளோடை அருகே நின்று கொண்டு இருந்ததை பார்த்த பிரதாப், அவரிடம் சென்று தனது நகை, பணத்தை தரும்படி கேட்டார். ஆனால் அவர் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதுபற்றி போலீசாருக்கு பிரதாப் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி, கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற அந்த நபரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த ரமணி (38) என்பது தெரியவந்தது. இவர் மீது கடலூர், புதுச்சேரி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்