வில்லியனூர் அருகே கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளி கண்காணிப்பாளர், காவலாளி பலி

வில்லியனூர் அருகே புதிதாக வகுப்பறைகள் கட்டுவதற்காக இடித்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து பள்ளி கண்காணிப்பாளர், காவலாளி ஆகியோர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2017-12-05 23:30 GMT

வில்லியனூர்,

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த 147 மாணவ–மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் முதல் தளத்துடன் 12 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் சேதமடைந்து இருந்ததால் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறை வசதிகள் இல்லாமல் இருந்தது.

இதனால் இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக வகுப்பறைகள் கட்ட பள்ளி நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதன்பேரில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமிபூஜை நடந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை 4.10 மணி அளவில் பள்ளி நேரம் முடிந்து, மாணவர்கள் வீடுகளுக்கு சென்ற பிறகு 2 பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அந்த பள்ளிக் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. அப்போது கட்டிடத்தின் மறுபுறம் இருந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பள்ளி அலுவலக கண்காணிப்பாளர் கொம்பாக்கத்தை சேர்ந்த சிவபாரதி (வயது 51), பள்ளி காவலாளி அய்யனார் (53), ஊழியர்கள் மதிவாணன், ராமன் ஆகியோர் கைகளால் அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்போது ஒருபுறம் பொக்லைன் எந்திரங்கள் இடித்த அதிர்வுகளாலும், அண்மையில் பெய்த தொடர் மழையாலும் சேதமடைந்து இருந்ததாலும் அந்த கட்டிடம் திடீரென்று முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. இதில் சிவபாரதி உள்பட 4 பேரின் மீதும் கட்டிட இடிபாடுகள் விழுந்து அமுக்கியது. இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இடிபாடுகளில் சிக்கி கிடந்த அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் 4 பேரும் சேர்க்கப்பட்டனர். இதில் பள்ளி அலுவலக கண்காணிப்பாளர் சிவபாரதி, காவலாளி அய்யனார் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார்கள். ராமன், மதிவாணன் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதிதாக வகுப்பறைகள் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்