‘ஒகி’ புயலில் நாசமான தென்னந்தோப்பு; சோகத்தில் விவசாயி தற்கொலை

‘ஒகி’ புயல் தாக்கி தென்னந்தோப்பு நாசமானதால் சோகத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-12-05 22:45 GMT
தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம், சாமிதோப்பு தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் தங்கராஜன் (வயது 47), விவசாயி. அவருக்கு சொந்தமான நிலத்தில் தென்னந்தோப்பு உள்ளது. மேலும், ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வெண்டை, கத்தரி பயிரிட்டு இருந்தார்.

கடந்த 30-ந் தேதி ஒகி புயல், மழை தாக்கியதில் தங்கராஜனின் தென்னந்தோப்பு நாசமானது. பல தென்னைகள் சாய்ந்தன. மேலும், குத்தகை நிலத்தில் பயிரிட்டு இருந்த வெண்டை, கத்தரிக்காய் பயிர்களும் பலத்த சேதம் அடைந்தன. இதை பார்த்த தங்கராஜன் அதிர்ச்சி அடைந்தார். நிலத்தை குத்தகைக்கு கொடுத்தவர்களுக்கு எப்படி பணம் கொடுப்பது? என்று வருத்தத்துடன் இருந்தார்.

இந்தநிலையில், பயிர்கள் சேதம் அடைந்ததால் சோகம் தாங்கமுடியாமல், அவர் வயலில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தங்கராஜன் பரிதாபமாக இறந்தார்.

அவருக்கு சிவஜோதி (45) என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புயலில் பயிர்கள் நாசமானதால், விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்